தினமலர் 06.11.2010
பொள்ளாச்சி நகராட்சியில் இயற்கை உரம் தயாரிப்பு “விறுவிறு‘
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில் சேகரமாகும் குப்பையை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. ஒரு டன் குப்பையில் இருந்து 60 சதவீதம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பை நல்லூர் அருகிலுள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் தேக்கப்படுகிறது. பல ஏக்கர் பரப்பில் தேங்கியுள்ள குப்பை பராமரிப்பு இல்லாமல் வீணாகி வந்தது.இந்நிலையில், குப்பை கிடங்கில் தேக்கப்படும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், விவசாயிகளுக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டது. இயற்கை உரம் தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது.மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கவும், மக்கும் குப்பையில் சிறிய குப்பையை தனியாக பிரிக்கவும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சி குப்பை கிடங்கு 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அதில், ஐந்து ஏக்கர் பரப்பில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் செட் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.நகராட்சி லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் குப்பையில் மக்கும் குப்பை தனியாக பிரிக்கப்படுகிறது. அதை கன்வேயர் மூலம் மிஷின் உள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இயந்திரத்தின் உள்பகுதியில் குப்பை சுழற்றப்பட்டு, 120 மில்லிமீட்டர் அளவுள்ள குப்பைகள் தனியாக பிரிக்கப்படுகிறது.
அதில், 120 மில்லிமீட்டர் அளவை விட பெரிதாக உள்ள குப்பைகள் தனியாக கழிக்கப்படுகிறது. ஜலிக்கப்பட்ட குப்பையை திறந்த வெளியில் கொட்டி சுத்தகரிக்கப்படுகிறது. அதன்பின், 45 நாட்களுக்கு குப்பை மக்க வைக்கப்படுகிறது.மக்கிய குப்பையில் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகள் நீக்கி மறுபடியும் சுழற்சி முறையில் இயந்திர ஜல்லடை கொண்டு ஜலிக்கப்படுகிறது. அதில், நான்கு மில்லி மீட்டருக்கு கீழுள்ள குப்பை இயற்கை உரமாக தனியாக வந்து விடும். மீதமுள்ள குப்பை கழிவு செய்யப்படும்.
இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரம் ஒரு டன் மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவைக்கு ஏற்ப 10, 25 கிலோ பேக்கிங் செய்தும் விற்கப்படுகிறது. விவசாயிகள் வாகனங்கள் கொண்டு வந்தால் டன் கணக்கில் அப்படியே விற்கப்படுகிறது.பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து தினமும் சராசரியாக 50 டன் குப்பை கிடைக்கிறது. அதில், 60 சதவீத குப்பை இயற்கை உரம் தயாரிக்க உகந்ததாக உள்ளது. அதிலிருந்து 20 சதவீதம் இயற்கை உரமாக கிடைக்கிறது. இயற்கை உரம் தயாரிக்க ஐந்து ஏக்கர் பரப்பில் 15 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.சாக்கடை கழிவுகள், அழுகிய காய்கறிகள், பொருட்களில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதால் விவசாயத்திற்கு சிறந்த தொழு உரமாக இருக்கும். இயற்கை உரம் தயாரித்து விற்கபட்டாலும் முறையாக துவக்க விழா நடத்தவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புடன் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.நகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறுகையில், “பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் இருந்து தினமும் 55 முதல் 60 டன் குப்பை கிடைக்கிறது. குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் நிறுவனத்தார் ஒரு டன் குப்பைக்கு 25 ரூபாய் கட்டணம் செலுத்துகிறார்கள். நகராட்சி நிர்வாகத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி 20 ஆண்டுக்கு பிறகு இந்த தொழிற்சாலையை இயந்திரத்துடன் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை ஏக்கருக்கு 500 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 2,500 ரூபாய் வாடகை செலுத்த வேண்டும்‘ என்றனர்.