தினமலர் 10.11.2010
குடும்ப திருமண விழாவிற்கு மாநகராட்சி “ஜீப் ‘புதிய சர்ச்சையில் மாநகராட்சி கல்வி ஆய்வாளர்
கோவை:குடும்ப திருமண விழாவிற்கு மாநகராட்சி ஜீப்பை கடந்த ஒரு மாதகாலமாக “மாநகராட்சி கல்வி ஆய்வாளர்‘ பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ளப் போவதாக மாநகராட்சி துணை கமிஷனர் கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி கல்வித்துறையில், கல்வி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சோமசுந்தரி. இவர் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் பணிபுரிந்து வந்தார். ஏற்கனவே பணிபுரிந்த கல்வி ஆய்வாளர் ராஜூ மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சோமசுந்தரி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
மாநகராட்சி கல்வித்துறைக்கு ஆய்வாளராக வரும் ஒவ்வொரு தலைமையாசிரியரும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கியோ, விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டோ, வகித்து வரும் பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அதில் தற்போது பணிபுரியும் பெண் கல்வி ஆய்வாளரும் தப்பவில்லை.
கோவை மாநகராட்சி வசம் 16 மேல்நிலைப் பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள், 13 நடுநிலைப்பள்ளிகள், 42 ஆரம்பப்பள்ளிகள், ஒரு காதுகேளாதோருக்கான பள்ளி ஆகியன உள்ளன. இங்கு 28 ஆயிரத்து 397 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி மேம்பாடு, மாணவ, மாணவியரின் கல்வி தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது, பள்ளி மேம்பாட்டிற்கு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் அழைத்து ஆலோசனை மேற்கொள்வது, மாநகராட்சி மன்ற கூட்டம், கல்விக்குழு கூட்டம் போன்றவற்றில் பங்கேற்று பள்ளி மேம்பாடு குறித்து ஆலோசனைகளை தெரிவித்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றிற்கு கல்வி ஆய்வாளராக தலைமையாசிரியர் ஒருவரை மாநகராட்சி நிர்வாகம் பணி நியமனம் செய்கிறது.
மாநகராட்சி கல்வி ஆய்வாளராக பணிபுரியும் சோமசுந்தரியின் மகனுக்கு சென்னையில் திருமணம் நடைபெறுகிறது. கோவையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான திருமண அழைப்பு கொடுப்பது முதல் மற்ற பணிகளை கவனிப்பது வரை, மாநகராட்சி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்களையும், மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள ஜீப் பையும் கல்வி ஆய்வாளர் சோமசுந்தரி பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. கல்வித்துறையில் பணிபுரியும் சக பணியாளர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் என்று பலரும் மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் பிரபாகரனிடம் கேட்ட போது, புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.