தினமணி 25.11.2010
மதுரை நகர் மேம்பாட்டுக்கான “மாஸ்டர் பிளான்‘ விரைவில் அமல்மதுரை
, நவ.24: மதுரை மாநகர் மேம்பாட்டுக்குத் தேவையான மாஸ்டர் பிளான் மறுசீரமைக்கப்பட்டுள்ளது; அரசு அனுமதித்தால் இந்த பிளான் 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் என, நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி
:மதுரை உள்ளூர் திட்டக் குழுமத்தில் மாநகராட்சி
, திருமங்கலம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய நகராட்சிகள், விளாங்குடி, பரவை, ஹார்விபட்டி ஆகிய பேரூராட்சிகள், 171 ஊராட்சிகள் உள்ளன. இதுதவிர மாவட்டத்தின் மற்ற பகுதிகள், தேனி, திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளும் இத்திட்டக் குழுமத்தின்கீழ் வரும்.நகர் மேம்பாட்டுக்காக
1993-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் அடிப்படையிலேயே தற்போது விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.தற்போது உள்ள நிலையில் ஏராளமான மாற்றங்களை நிலங்கள் சந்தித்துள்ளன
. வயல் காடுகளாக இருந்த நிலங்கள் வீட்டடி மனைகளாகவும், வீட்டடி மனைகளாக இருந்த நிலம் தொழிற்சாலைக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, மதுரைக்கான மாஸ்டர் பிளான் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த பிளான் அரசின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்படும்
. அரசு அனுமதித்தால் 3 மாதங்களில் இந்த பிளான் அமல்படுத்தப்படும். மேலும், கட்டட வரைபட மற்றும் அனுமதியை மதுரையிலேயே பெறலாம். இந்த பிளானில் தற்போது நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைத் துறைப் பணிகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சிப் பகுதியில்
4,000 சதுர அடி வரையான கட்டடங்களுக்கு வரைபடம் மற்றும் கட்டட அனுமதியை மாநகராட்சியே அளிக்கலாம். 15 ஆயிரம் சதுர அடி வரை ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதி அளிக்கலாம். அதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு சென்னையில்தான் அனுமதி பெறவேண்டும்.மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால்
9 மீட்டர் உயரம் வரை கட்டடங்கள் கட்டிக்கொள்ளலாம். ஆனால் சில நிபந்தனைகள் இதற்கு விதிக்கப்பட்டுள்ளன. அதாவது சாலையின் அகலத்தைப் பொருத்து கட்டட உயரம் இருக்க வேண்டும். சாலை அகலம் 12 மீட்டர் இருந்தால் அச்சாலையில் 24 மீட்டர் உயரம் வரை கட்டடங்கள் கட்டலாம். 15 மீட்டர் அகலம் உள்ள சாலையில் 30 மீட்டர் உயரம் வரையும், 18 மீட்டர் முதல் 30.5 அடி அகலம் வரை சாலை இருந்தால் 60 மீட்டர் உயரம் வரை கட்டடங்கள் கட்டலாம். இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.