தினமணி 01.09.2009
“விதிகளை மீறி பன்றிகள் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை‘
விழுப்புரம், ஆக. 31: விழுப்புரம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பன்றிகள் மக்கள் வசிப்பிடங்கள் அருகே சுற்றித் திரிந்தால் அதை வளர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி எச்சரித்தார். இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தற்போது ஸ்வைன் புளூ என்னும் வைரஸ்ஸôல் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இது பரவுவதை தடுக்க பொதுமக்கள் தங்கள் சுற்றுப் புறங்களில் சாக்கடை நீர் தேங்காமலும், பன்றிகள் சுற்றித் திரியாமலும் விழிப்புடன் பார்த்து கொள்ள வேண்டும். ஊராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களும், நகராட்சி தலைவர்கள், ஆணையர்களும் இவற்றை கண்காணிக்க வேண்டும். பன்றி வளர்ப்போர் ஊருக்கு ஒதுக்குபுறமாக பன்றிகளை பட்டிகளில் அடைத்து வளர்க்க வேண்டும்.
மீறினால் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிப்பதோடு, பன்றி வளர்ப்போர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படியும் பொது சுகாதாரச் சட்டம் 1939(44)-ன் படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.