தினமலர் 07.12.2010
நகராட்சி பள்ளியில் நவீன “டைனிங் ஹால்‘
தாம்பரம் : சேலையூரில் உள்ள, நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் வசதியாக, உணவு அருந்துவதற்காக 9.50 லட்சம் ரூபாய் செலவில் டைனிங் ஹால் ஒன்று அமைக்கப்பட்டது.சேலையூரில், தாம்பரம் நகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. சேலையூர், ஆதி நகர், பாரத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 300 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்கள் உணவு அருந்துவதற்கு கூட இட வசதி இல்லாமல் இருந்தது.
மரத்தடியில் ஆங்காங்கே உட்கார்ந்து உணவு அருந்தியதால், மர இலைகள், பறவைகளின் எச்சங்கள் ஆகியவற்றால் மாணவர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். அதேபோல், சத்துணவு கூடத்திற்கான, பணியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இப்பள்ளியை மேம்படுத்த வேண்டும், என பெற்றோர் கோரிக்கை எழுப்பினர். இதையடுத்து, 9.50 லட்சம் ரூபாய் செலவில் இப்பள்ளியை சீரமைக்கும் பணிகள் துவங்கின. சத்துணவு கூடத்தை சீரமைத்தல், கூடுதல் கழிப்பிடம், சுற்றுச் சுவர், மேடை, வாட்டர் டேங் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டன. மேலும், மாணவ, மாணவியர்கள் சிரமமின்றி உணவு அருந்த டைனிங் ஹால் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில்,” நகராட்சியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் வசதிக்காக, டைனிங் ஹால் அமைக்கப்பட்டுள்ள ஒரே பள்ளி இந்தப் பள்ளி தான். இந்த டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில், 100 மாணவர்கள் உட்கார்ந்து சாப்பிட முடியும்,’ என்றார்.