தினமணி 07.12.2010
“தச்சநல்லூர் மக்கள் பழைய குடிநீர் கட்டணம் செலுத்தினால் போதும்’
திருநெல்வேலி, டிச. 6: தச்சநல்லூர் மக்கள் பழைய குடிநீர் கட்டணம் செலுத்தினால் போதும் என திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தச்சநல்லூர் மண்டலம் 1,2,3,4,55 வார்டுகளில் வீட்டு குடிநீர் கட்டணம் ரூ. 50 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குடிநீர் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு 2007-ல் புதிய குடிநீர் திட்டம் அந்த வார்டுகளுக்கு செயல்படுத்தப்பட்டது.
இதற்காக உலக வங்கியிடம் கடன் பெறப்பட்டது. வாங்கிய பணத்தை திருப்பி செலுத்துவதற்காக மாதம் ரூ. 125 குடிநீர் கட்டணம் வசூலிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதேபோல, தியாகராஜநகர், என்.ஜி.ஒ. காலனி, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ. 22.22 கோடி ஜெர்மன் வங்கியில் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இத் திட்டங்களுக்கான கடனை திருப்பிச் செலுத்த அரசின் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் இணைப்புகளுக்கு ஒரே சீராக மாதம் ரூ. 100 குடிநீர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானத்தின் படியே கடந்த 1-7-2010 முதல் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே ஓர் அமைப்பு, தச்சநல்லூரில் குறிப்பிட்ட வார்டுகளில் ரூ. 125 குடிநீர் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இடைக்காலத் தடை பெற்றது.
மேலும், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை பழைய கட்டணமான ரூ. 50 வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே இறுதித் தீர்ப்பு வரை அந்தப் பகுதி மக்கள் ரூ. 50 குடிநீர் கட்டணம் செலுத்தினால்போதும். எனவே அப் பகுதி மக்கள் வீணான வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம். போராட்டங்கள் எதுவும் நடத்த தேவையில்லை என்றார் சுப்பிரமணியன்.