துறையூரில் குடிநீர் வழங்கல் பாதிக்கும் அபாயம் : நிலுவைத்தொகை பிரச்னை : தவிக்கும் “நகராட்சி நிர்வாகம்
துறையூர்: துறையூர் நகராட்சி குடிநீர் வாரியத்துக்கு நிலுவைத் தொகை செலுத்தாததால் தண்ணீர் நிறுத்தும் அபாயமுள்ளதாக வெளியான தகவலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
துறையூர் நகராட்சியில் 24 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி பகுதியில் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத உப்புநீர் மட்டுமே இருந்ததால் காவிரி குடிநீர் கேட்டு மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 1996- 2001 தி.மு.க., ஆட்சியில் துறையூர் நகராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் 33 கோடி ரூபாய் செலவில் அமலாக்கப்பட்டது. முதல் கட்டமாக நகரில் பழைய இணைப்பு வைத்திருந்தவர்களுக்கு அவசரமாக காவிரி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. காவிரிக்குடிநீர் பெற உயர்த்தப்பட்ட புதிய டிபாஸிட் தொகை, நிலுவை குடிநீர் கட்டணம் செலுத்தாத பழைய இணைப்புதாரர்கள் உள்ளதாக தெரிகிறது.
புதிய குடிநீர் இணைப்பு வழங்க பகிர்மான குழாய் பதிக்கும் பணிகள் நடந்து கடந்த மூன்றாண்டுக்கு முன் புதிய இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. புதிய இணைப்பு வழங்கப்பட்டதில் அரசின் விதிமுறைப்படி ஏழு நாளிலிருந்து குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும். இணைப்பு வழங்கப்பட்டதிலிருந்து இன்று வரை குழாயில் குடிநீர் வரவில்லையென பலரும் புகார் கூறுகின்றனர். இவர்களது நிலுவைத் தொகையும் வசூலாகும் வாய்ப்பில்லாமல் உள்ளது. நகராட்சியில் குடிநீர் பிரச்சனை தீர போதுமான அலுவலர்கள், பணியாளர்கள் நகராட்சியில் இல்லாததும், அனைத்து வார்டுகளிலும் குழிவெட்டி பிடிப்பது, மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுவது, ப்ளோ கண்ட்ரோல் வால்வு குடிநீர் இணைப்புகளில் பொருத்தாதது என பல காரணங்கள் தொடர்ந்து கூறப்படுகிறது.
கடந்த 19, 21ம் தேதியில் நகரில் குடிநீர் விநியோகிக்கவில்லை. குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி செலுத்த வேண்டிய எட்டு லட்ச ரூபாய் நிலுவைத்தொகை செலுத்தாததால், குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்போவதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் பரவியது.
துறையூர் நகராட்சி கமிஷனர் (பொ) மற்றும் இன்ஜினியர் ரவிச்சந்திரன் கூறியதாவது: குடிநீர் வாரியத்திற்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. அதனால் வாரிய அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை நிறுத்தப்போவதாக பரப்பப்படும் செய்தி தவறு. இதுகுறித்து நகராட்சித் தலைவர், துணைத்தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. நகரில் குடிநீர் பிரச்னை தீர அரசு கவனம் செலுத்தி வருகிறது. கவுன்சிலர்களுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நிலுவைத் தொகை செலுத்த இணைப்புதாரர்களுக்கு நகராட்சி சார்பில் ஏற்கனவே கடிதம் அனுப்பியதில் 40 சதவீதம் வசூலானது. மீதமுள்ளோரும் நிலுவைத்தொகை வழங்கி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.