மாலை மலர் 22.03.2010
இந்த ஆண்டு முதல் “குடிநீர் கட்டணம், சொத்து வரி வீடு தேடி வந்து வசூலிக்கப்படும்” மேயர் வெங்கடாசலம் அறிவிப்பு
கோவை, மார்ச். 22-
கோவை மாநகராட்சியில் மின்னணு முறையில் ஏலம் விடுதல் மின்னணு கருவி மூலம் வீடு தேடி வரி வசூல் செய்யும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று மேயர் வெங்கடாசலம் கூறினார்.
மேயர் வெங்கடாசலம் கூறும்போது:-
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கட்டாய சீர் திருத்தங்களின்படி 100 சதவீத சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும்.
இந்த இலக்கை அடைய கையடக்க வரி வசூல் கருவிகளின் உதவியுடன் வீடு தேடி சென்று மக்களிடம் வரி வசூலிக்கப்படும். பொது மக்களின் வசதிக்காக மிகவும் எளிதான இணைய மூலம் கட்டணம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும்.
வரி வசூல் கருவியில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு குடிநீர் கட்டண கேட்புகள் உடனுக்குடன் கணக்கெடுப்பு செய்து உயர்த்தப்படும். அதற்குறிய வசூல் அதே இடத்தில் கருவியின் பயன் பாட்டுடன் வசூலிக்க இயலும்.
பொது மக்கள் மாநகராட்சி வரி வசூல் மையங்களுக்கு வந்து காத்திருந்து சொத்துவரி, குடிநீர் கட்டணம் முத லிய கட்டணங்களை செலுத்து வதை எளிதாக்கும் பொருட்டு அவர்களது இருப்பிடத்தில் இருந்தபடியே வங்கிகளின் கடன் மற்றும் பற்று அட்டைகள் வாயிலாக இக்கருவிகளின் மூலம் தொகை வசூல் செய்யப்பட்டு ரசீது வழங்கப்படும்.
அதேபோல மாநகராட்சியின் வணிக வளாக கடைகள் உள்ளிட்ட அனைத்து குத்தகை இனங்களுக்கும் நடத்தப்பட்டு வந்த பொது ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளியினை உள்ளாட்சி அமைப்புகளில் முதன்முறையாக கோவை மாநகராட்சியில் இந்தாண்டு முதல் மின்னனு முறையில் ஏலம் நடத்தப்படும்.
இவ்வாறு மேயர் வெங்கடாசலம் தெரிவித்தார்.