தினமலர் 02.06.2010
கரூரில் பிளாஸ்டிக் “கப்‘ பறிமுதல்: நகராட்சி நிர்வாகம் அதிரடி “ஆக்ஷன்‘
கரூர்: கரூர் நகராட்சி பகுதியில் நேற்று முதல் பிளாஸ்டிக் “கப்‘ பயன்படுத்த தடை அமலாக்கப்பட்டதால், நகராட்சி காதாரத்துறை ஊழியர்கள், கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் “கப்‘ பறிமுதல் செய்தனர். நகராட்சி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் “கப்‘ பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. கரூர் நகராட்சி கமிஷனராக உமாபதி பொறுப்பேற்றதும், முதற்கட்டமாக நகரில் பிளாஸ்டிக் “கப்‘ பயன்பாட்டை கட்டுப்படுத்த அறிவித்தார்.
ஏற்கனவே கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் “கப்‘களை அப்புறப்படுத்த ஜூன் முதல் தேதிவரை அவகாசம் அளிக்கப்பட்டது. அனைத்து பலசரக்கு கடை, திருமண மண்டபம், சினிமா தியேட்டர், குளிர்பானம் மற்றும் டீக்கடைகளில் நகராட்சியின் தீர்மானம் குறித்து அறிவிக்கப்பட்டு, கடை உரிமையாளர்களிடம் எழுத்து பூர்வமாக ஒப்புதல் வாங்கப்பட்டது. பிளாஸ்டிக் “கப்‘ களை அப்புறப்படுத்த கடைகளுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் நேற்று முன்தினம் முடிந்ததால், நேற்று காலை நகராட்சியின் சுகாதார அலுவலர் மற்றும் ஏழு துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் தலா ஐந்து பேர் கொண்ட குழு பல பகுதியிலும் கடைகளில் ஆய்வு நடத்தியது.
முருகநாதபுரம் கடைவீதியில் மட்டும் சில கடைக்காரர்கள் பிரச்னை எழுப்பியபோதும், ஊழியர்கள் தடை அறிவிப்பை அமலாக்குவதில் தீவிரமாக இருந்தனர். சுமார் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் “கப்‘ பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இத்தகைய ஆய்வு கடைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட அனைத்து பொது இடங்களிலும் அவ்வப்போது நடத்தப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.