தினமலர் 22.12.2010
“இறைச்சி கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை”
வால்பாறை:இறைச்சிக்கழிவுகளை திறந்த வெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.வால்பாறையில் காட்டுயானை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகளின் பிரச்னை தொடர்பாக மாவட்ட கலெக்டர் உமாநாத் தலைமையில் பொள்ளாச்சியில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வால்பாறையில் சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க எஸ்டேட் பகுதிகளில் இறைச்சிக் கடைகள் வைக்க தடைவிதிக்க வேண்டும். காட்டு யானைகள் விரும்பி உண்ணும் வாழைகளை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் பயிரிடக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதனையடுத்து வால்பாறை நகராட்சி செயல்அலுவலர் சுப்பிரமணி(பொறுப்பு) தலைமையில் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் எஸ்டேட் பகுதிகளில் செயல்பட்டுவரும் இறைச்சிகடைகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின் அவர்கள் கூறுகையில், எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை தவிர்க்க குடியிருப்பு பகுதியையொட்டி இறைச்சிக்கடை நடத்தக்கூடாது. ஒதுக்குப்புறமான இடத்தில் இறைச்சிக்கடை வைப்பதுடன், கழிவுகளை குழிதேண்டி புதைக்க வேண்டும். நகராட்சி அனுமதி இல்லாமல் எஸ்டேட் பகுதிகளில் முறைகேடாக இறைச்சிக்கடை நடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.