தினமலர் 07.08.2012
“டெங்கு’, “சிக்குன்குனியா’ கொசுவை ஒழிக்க வீடு வீடாக ஆய்வு செய்யும் சுகாதாரத்துறை
சிவகங்கை:மாவட்டத்தில்,கொசுக்களின் மூலம் “சிக்குன்குனியா,’ “டெங்கு,’ பரவுவதை தடுக்க, கொசுக்களை உற்பத்தி செய்யும் “லார்வா’ புழுக்களை ஒழிக்க, வீடு வீடாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையவில்லை. இது தவிர கிராமப்புற வீடுகளில் சேகரமாகும் கழிவு நீரை அப்புறப்படுத்த போதிய கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் சேகரமாகும் கழிவு நீர் ரோட்டில் தேங்குகிறது. இது தவிர, கொசுக்களை ஒழிப்பதற்கென மருந்துகளை பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகம் அடிப்பதே இல்லை. இது போன்ற காரணத்தால் சாக்கடை கழிவு நீர், வீணாகிபோன டயர், தேங்காய் சிரட்டை, தொட்டிகளில் தேங்குகிறது. இந்நீரின் மூலம் “லார்வா’ புழு உருவாகி கொசுக்கள் வளர்கின்றன. இவை கடிப்பதால், எளிதில் “சிக்குன்குனியா,’ “டெங்கு’,நோய்கள் பரவுகின்றன.
வீடு வீடாக சோதனை:
இவற்றை தடுக்க, சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக, மூன்று நகராட்சிகளுக்கு 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நகராட்சி பகுதியில் வீடுகள் தோறும் சென்று, வீட்டை சுற்றி “டயர்’, தொட்டிகள், தேங்காய் சிரட்டைகள் கிடந்தால் அவற்றை அப்புறப்படுத்துகின்றனர். இவற்றில், தண்ணீர் தேங்கியிருந்தால் அங்கு “அபேட்’ மருந்து தெளித்து வருகின்றனர்.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதற்கட்டமாக நகராட்சி பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க குழு அமைத்துள்ளோம். “சிக்குன்குனியா,’ “டெங்கு’ நோய் அறிகுறி தென்படும் கிராமங்களில் இது போன்று குழுக்கள் நியமிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணி நடக்கும், என்றார்.