“2017-க்குள் மதுரை குடிசையில்லா மாநகராக மாற்றப்படும்’
மதுரை மாநகராட்சியில் குடிசைகளற்ற மாநகரத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 2017 ஆம் ஆண்டுக்குள் மதுரை குடிசைகள் இல்லாத மாநகரமாக மாற்றப்படும் என, ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி பகுதியில் ராஜீவ்காந்தி வீட்டுவசதி திட்டம் என்ற குடிசைகளற்ற மாநகர திட்டம் குறித்த, பெண் மாமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பயிற்சி முகாம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார்.
திட்டம் குறித்து, ஆணையர் ஆர். நந்தகோபால் பேசியதாவது:
தென்னிந்தியாவில் ஹைதராபாத், பெங்களூர் மாநகரங்களுக்கு அடுத்தபடியாக, ராஜீவ் வீட்டு வசதி திட்டம் என்கிற குடிசைகளற்ற மாநகரத் திட்டத்தை செயல்படுத்த மதுரை மாநகராட்சி பகுதியை மத்திய, மாநில அரசுகள் தேர்வு செய்துள்ளன. ஏற்கெனவே, மாநகரில் பிஎஸ்யுபி திட்டம் என்கிற குடிசை வீடுகளை மாற்றும் திட்டம் 5 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது. அந்த திட்டத்தில், மீதமுள்ள 5 ஆயிரம் வீடுகள் வரை கட்டுவதற்கு பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த வார்டிலுள்ள மாமன்ற உறுப்பினர்கள், குடிசை வீடுகளுக்கான தலா 50 பயனாளிகள் வரை தேர்வு செய்து பரிந்துரை செய்யலாம். கூடுதல் பயனாளிகள் இருந்தாலும் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும்.
புதிதாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ராஜீவ் வீட்டு வசதித்திட்டம் என்கிற குடிசைகளற்ற மாநகர திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் மூலம், மாநகராட்சி பகுதி குடிசைப்பகுதிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே உள்ள பிஎஸ்யுபி திட்டத்தில், ஒவ்வொரு குடிசை வீடுகளுக்கும் தனித்தனியாக நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய ராஜீவ் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் குடிசைகள் அமைந்துள்ள பகுதி முழுவதும் வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதுடன், அந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். ஆற்றங்கரையோரங்கள், குளங்கள், கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பில் குடிசைகளில் வசிப்போருக்கு, மாற்று இடத்தில் இந்த வீடுகள் கட்டித் தரப்படும். இத்திட்டத்திற்கான நிதியில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும், 10 சதவீதத்தை பயனாளிகளும் செலுத்த வேண்டும். 2017 ஆம் ஆண்டுக்குள், மாநகரம் குடிசைகளற்ற மாநகரமாக மாற்றப்படும். பிஎஸ்யுபி திட்டப்பயனாளிகள் தேர்வு முற்றிலுமாக முடிக்கப்பட்டவுடன், புதிய திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். அனைத்து குடிசைப் பகுதிகளும் விடுதலின்றி இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, ஒரு குடிசைகூட இல்லாத மாநகரமாக மதுரை மாற்றப்படும், என்றார்.
உறுப்பினர்கள் சண்முகவள்ளி, கேசவபாண்டியம்மாள் உள்ளிட்ட பலரும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கும், இத்திட்டத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என ஆணையர் தெரிவித்தார்.
திமுகவைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் தவிர்த்து, அனைத்து பெண் மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
பிஎஸ்யுபி திட்டத்தில் வார்டுதோறும் 50 பயனாளிகளை பரிந்துரைக்கத் தேவையான விண்ணப்பங்களை உறுப்பினர்களுக்கு மேயர் வழங்கினார்.