தினமணி 13.07.2012
“45 நாள்களுக்கு கோவையில் குடிநீர்ப் பிரச்னை இருக்காது’
கோவை, ஜூலை 12: சிறுவாணி அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால், அடுத்த 45 நாள்களுக்கு கோவை மாநகராட்சிக்குக் குடிநீர்ப் பிரச்னை இருக்காது என்று, கோவை மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்தார்.
கோவையில் “தினமணி’ நிருபரிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:
சிறுவாணி அணைப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு 15 மி.மீ. மழை பெய்தது. இதனால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்போதுள்ள நீர் மட்டத்தில் 10 அடி வரை தண்ணீர் எடுக்க முடியும். இதனால் அடுத்த 45 நாள்களுக்கு கோவை மாநகராட்சிப் பகுதியில் குடிநீர்ப் பிரச்னை இருக்காது.
பில்லூர் அணைப்பகுதியில் இருந்து வரும் நீரை சிறுவாணி குடிநீர்த் தொட்டியுடன் இணைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு முடிந்துவிட்டால், கோவை மாநகராட்சிக்கு எப்போதுமே குடிநீர் பிரச்னை இருக்காது.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில், மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் 10 லட்சம் பேருக்கு கூடுதல் குடிநீர் வழங்கப்படுகிறது.
கோவை மாநகராட்சிப் பகுதியில் வார்டுக்கு ஒரு நாள் வீதம் சிறப்பு துப்புரவு முகாம் வெள்ளிக்கிழமை துவக்கப்படும். 50 துப்புரவுப் பணியாளர்கள், 2 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இம்முகாம் நடத்தப்படும்.
வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள முகாமை அமைச்சர் கே.பி.சாமி துவக்கிவைக்க உள்ளார் என்று கூறினார்.