தினமலர் 14.08.2013
உழவர்கரை நகராட்சிக்கு “காம்பாக்டர்” வாகனம்
புதுச்சேரி : குப்பை அகற்றும் பணிக்காக, காம்பாக்டர் வாகனத்தை, உழவர்கரை நகராட்சி வாங்க உள்ளது.
குப்பை அகற்றும் பணிக்கு தற்போது டிராக்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீதிகளில் குவியும் குப்பைகளை, தொழிலாளர்கள் அகற்றி, டிராக்டர்களில் கொட்டுகின்றனர். டிராக்டர்கள் நிரம்பியவுடன், குப்பை கொட்டும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
குப்பைகளை விரைவாக அகற்றும் வகையில், “காம்பாக்டர்’ எனப்படும் நவீன வாகனத்தை வாங்குவதற்கு, உழவர்கரை நகராட்சி ஆர்டர் அளித்துள்ளது. 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காம்பாக்டர், ஓரிரு வாரங்களில் வர உள்ளது.
இந்த வாகனம் மூலம் குப்பைகளை அகற்றுவதற்கு வசதியாக, மெகா சைஸ் குப்பைத் தொட்டிகள் 25 வாங்கப்பட்டுள்ளன. குப்பை அதிகம் சேரும் இடங்களில், இந்த குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். மெகா சைஸ் குப்பைத் தொட்டிகள் நிரம்பியவுடன், காம்பாக்டர் வாகனத்தில் இணைக்கப்பட்டு, குப்பைகள் காம்பாக்டருக்குள் கொட்டப்பட்டு, உடனுக்குடன் அகற்றப்படும்.