தினமலர் 23.10.2013
சென்னையில் 242 இடங்களில் மழைநீர் வெள்ளம் ‘பம்பு செட்’ உதவியுடன் அகற்றியது மாநகராட்சி
சென்னை:’சென்னையில் நேற்று பெய்த கனமழைக்கு, 242 இடங்களில் மழைநீர் தேங்கியது. போக்குவரத்து சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீரை, ‘பம்பு செட்’ மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டது’ என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து, சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல், விடியவிடிய மழை கொட்டி தீர்த்தது.
வெள்ளநீர் சூழ்ந்தது
திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை வ.உ.சி., நகர், புது வண்ணாரப்பேட்டை, சூரியநாராயணா சாலை, கொருக்குப்பேட்டை, இளையமுதலி தெரு, வியாசர்பாடி, கொடுங்கையூர் எழில்நகர், தாமோதரன் நகர், வெங்கடேஸ்வரா நகர், முத்தமிழ் நகர் என, ௧௦௦க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
சூரியநாராயணா சாலை குண்டும், குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினர்.
அண்ணாநகர் மேற்கு, வடபழனி, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, மாத்துார், பெரியமாத்துார், பாடி எம்.டி.எச்., சாலை, அண்ணாநகர் ரவுண்டானா, எம்.எம்.டி.ஏ., காலனி, எம்.கே.பி., நகர், முகப்பேர் பகுதிகளிலும் மழைநீர்
தேங்கியது. தென்சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, சோழிங்கநல்லுாரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
கனமழைக்கு நகர் முழுவதும் 242 இடங்களில் மழைநீர் தேங்கியதாகவும், மாநகராட்சிக்கு சொந்தமான, 74 ‘பம்பு செட்டுகள்’ மற்றும் பல மண்டலங்களில் வாடகை ‘பம்பு செட்டுகள்’ மூலம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சி புகார் தொலைபேசியான 1913ல் மட்டும் 70 புகார்கள் மழைநீர் சம்பந்தமாக பதிவாகின. பேருந்து சாலைகளில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த சாலை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. எழும்பூர், கெங்குரெட்டி சுரங்கப்பாலத்தில், மெட்ரோ ரயில் சுரங்கத்தில் இருந்து குழாய் உடைப்பு ஏற்பட்டு, நுரையுடன் கூடிய வெள்ளநீர் நிரம்பியது.
இதனால் அந்த சுரங்கப் பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின் மோட்டார் மூலம் சுரங்கப் பாலத்தில் தேங்கிய நீர் அகற்றப்பட்டது.
ஆலந்துார் மண்டலம், கண்ணன்நகர் பகுதியில், மரம் விழுந்ததால், ஏழு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதே போல், மணலியில், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு தான் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டதால், அந்த பகுதிவாசிகள், இரவில் துாங்க முடியாமல், மிகவும் சிரமப்பட்டனர்.
மயிலாப்பூர், தி.நகர், வடபழனி, அடையாறு, சி.ஐ.டி., நகர் ஆகிய பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை, மேயர் சைதை துரைசாமி, கமிஷனர் விக்ரம் கபூர் நேரில் பார்வையிட்டனர். மழைநீரை அகற்ற ஊழியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் பணியில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், போலீசாருடன் இணைந்து செயல்படுவதன் மூலம் சாலைகளில் தேங்கியுள்ள நீர் உடனுக்குடன் அகற்றப்படுவதாகவும், காவல்துறைக்கு வரும் புகார்களை மாநகராட்சி அறிந்து நிவர்த்தி செய்வதாகவும் மாநகராட்சி தலைமை பொறியாளர் லெஸ்லி ஜோசப் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
14 மரங்கள் வேரோடு சாய்ந்தன கடந்த மாதம் பெய்த கனமழையில், சென்னையில், 50க்கும் மேற்பட்ட மரங்கள், வேரோடு சாய்ந்தன. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி இருப்பதால், நகரின் பல்வேறு பகுதிகளிலும், மரங்கள் வேரோடு சாய துவங்கியுள்ளன.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை, சென்னையில், 14 இடங்களில், மரங்களும், இரண்டு இடங்களில் மரக்கிளையும் முறிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.
வேளச்சேரி ராம்நகர், கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை, கோடம்பாக்கம் மண்டலம், ஏ.வி.எம்., அவென்யூ, ஆறாவது தெரு, ஆர்.ஏ., கவுடா சாலை, திரு.வி.க., நகர் மண்டலம், சீனிவாசா நகர் முதல் பிரதான சாலை, பெரியார்நகர் ஆறாவது பிரதான சாலை உள்ளிட்ட, 14 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இரண்டு இடங்களில், கிளைகள் முறிந்து விழுந்தன.