துரைப்பாக்கம் ஆனந்தா நகரில் மழைநீர் கால்வாய் ஆய்வு பணிகள் முடிந்ததாக மாநகராட்சி விளக்கம்
சென்னை:மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் கள ஆய்வு முடித்து, கடந்த, 2ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது. விரைவில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, துரைப்பாக்கம் ஆனந்தா நகர், விநாயகா நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படும்,’ என, மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், துரைப்பாக்கம் ஆனந்தா நகர், விநாயகா நகரில் மழைநீர் கால்வாய், சாலை பணிகள் எதுவும் நடைபெறவில்லை என, ‘தினமலர்’ நாளிதழில் நேற்று, விரிவான செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அளித்துள்ள விளக்கம்:
மழைநீர் கால்வாய் அமைக்க கோரி ஆனந்தா நகர், விநாயகா நகர் நலசங்கங்கள் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல், செப்டம்பர், இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மேயரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
பரிந்துரை
இந்த புகார்கள் மீது நடவடிக்கை கோரி, மழைநீர் வடிகால்வாய் துறை மேற்பார்வை பொறியாளருக்கு மேயர் பரிந்துரை செய்துள்ளார். குறிப்பிட்ட நலச்சங்கங்கள் கொடுத்த மற்ற புகார்கள் மீதும் நடவடிக்கை கோரி அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நடவடிக்கை இல்லாமல் இருந்தால், தெரிவிக்க கோரி மேயர் நேரடியாக, அந்த நலசங்கங்களுக்கு கடிதம் எழுதிஉள்ளார்.
கள ஆய்வு
இந்த நகர்களின் மழைநீர், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இது பெரிய பணி என்பதால், விரிவான கள ஆய்வுக்கு தனியார் நிறுவனத்தை மாநகராட்சி நியமித்தது.
டெட்ரா டெக் என்ற அந்த நிறுவனம் ஆய்வு பணிகளை முடித்து, கடந்த, 2ம் தேதி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு, இனி, திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் பணிகள் துவங்கப்படும்.
ஆனந்தா நகரில், ஒன்பது குறுக்கு சாலைகளும், விநாயகா நகரில், ஏழு குறுக்கு சாலைகளும் உள்ளன. இங்கு, 50.90 லட்சம் ரூபாய் மதிப்பில், கப்பி தள சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதிப்பீடு
இதன் மீது, தார் சாலைகள் அமைக்க, 48.65 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, வார்டு குழு ஒப்புதல் இன்று (நேற்று) பெறப்பட்டது. இந்த நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆனந்தா நகர் பிரதான சாலையை, 1.14 கோடி ரூபாய் செலவில் அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ‘கிரீட் 3’ திட்டத்தில் இது செய்யப்படும். இந்த நகர் அமைந்துள்ள 193வது வார்டில் அடுத்த மாதம் கழிவுநீர் மற்றும் குடிநீர் பணிகள் துவங்க இருப்பதால், அந்த பணி முடிந்த பிறகே சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படும். இவ்வாறு மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.