தினமலர் 03.08.2013
போலி சான்றிதழ் மாநகராட்சி ஆசிரியர்கள் விரைவில் பணி நீக்கம் செய்ய பரிசீலனை
சென்னை:போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மாநகராட்சி இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி இடைநிலை ஆசிரியர்கள் பலர், போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தகவல் வெளியானது. இதுகுறித்து, மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் குறித்து, ‘தினமலர்’ நாளிதழ் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, சர்ச்சையில் சிக்கிய போலி சான்றிதழ் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சான்றிதழ் போலி என உறுதி செய்யப்பட்டுள்ள, 10 பேரை விரைவில் பணி நீக்கம் செய்யவும், இந்த சர்ச்சை பட்டியலில் உள்ள, 126 பேர் மீதான விசாரணையை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில், பல ஆசிரியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்துள்ளது. விசாரணைக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.