தினமலர் 15.10.2013
இறுதி கட்டத்தில் பாரம்பரிய கட்டடங்களின் முதலாவது பட்டியல்
ராயபுரம் ரயில் நிலையம் உள்ளிட்ட, 66 பாரம்பரிய கட்டடங்களின் முதலாவது பட்டியலை அரசுக்கு அனுப்புவதற்கான பணிகள், இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. இதுகுறித்து, வரும், 15ம் தேதி நடக்கும் குழும கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.,) பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. கடந்த, 2010ம் ஆண்டு இந்த குழுவினர் கணக்கெடுப்பை துவக்கினர்.
இதில் தெரியவந்த விவரங்கள் அடிப்படையில், 350 கட்டடங்கள் ஆய்வு செய்து, முதல் கட்டமாக, 66 கட்டடங்கள் அடங்கிய வரைவு பட்டியல் இறுதி செயப்பட்டது.சி.எம்.டி.ஏ., இணைய தளத்தில் ஜூன் மாதம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. முதல் பட்டியலில், ராயபுரம் ரயில் நிலையம், ஐகோர்ட், அண்ணா பல்கலை பிரதான கட்டடம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட, 20 கட்டடங்கள் முதல் நிலை கட்டடங்களாக வகைபடுத்தப் பட்டுள்ளன.
வரவில்லை இதன் மீது பொது மக்கள் தங்கள் கருத்துகளை ஜூலை, 15ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், எதிர்பார்த்ததைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே பொது மக்களிடம் இருந்து கருத்துகள் வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து, பொது மக்கள், கட்டடங்களின் உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில், அறிக்கை தயாரிக்கப்பட்டு குழும கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கு குழும கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தபின், அரசின் ஒப்புதலுக்கு அனுப்பட்டு பாரம்பரிய கட்டடங்களின் முதலாவது இறுதி பட்டியல் அரசிதழில் வெளியிடப்படும் என்பது சி.எம்.டி.ஏ.,வின் நடைமுறையாக உள்ளது.
இறுதி கட்டத்தில்…இதுகுறித்து சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த நடைமுறையின்படி, முதலாவது வரைவு பட்டியல் குறித்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது வரும், 15ம் தேதி நடக்க உள்ள குழும கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதி ஒப்புதலுக்காக அரசுக்கு விரைவில் அனுப்பப்படும். அதன் பின், 66 கட்டடங்கள் பாரம்பரிய கட்டடங்களாக அதிகாரப்பூர்வமாக அரசிதழில் அறிவிக்கப்படும்.
சுமார், 50 பாரம்பரிய கட்டடங்கள் அடங்கிய இரண்டாவது வரைவு பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்டடங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரிடம் தனித்தனியாக கருத்துகளை பெறுவதற்கான கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன.பொது மக்கள் கருத்துக்களை பெறுவதற்காக இந்த வரைவு பட்டியலும் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.