தினமலர் 01.10.2013
சென்னையில் தங்கும் விடுதிகளுக்கு…உரிமம் பெற 30 நிபந்தனைகள்
சென்னை:சென்னையில், இதுநாள் வரை, எந்த கண்காணிப்பும் இல்லாமல், விருப்பம் போல் இயங்கி வந்த, தங்கும் விடுதிகளை முறைப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னையின் பல்வேறு பகுதிகளில், 1,200 தங்கும் விடுதிகள் உள்ளன. மேன்ஷன், விருந்தினர் இல்லம், ஓய்வு விடுதி, சேவை விடுதி, பணி செய்யும் மகளிர் மற்றும் ஆடவர் தங்கும் விடுதி என, பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் இந்த விடுதிகள், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் அல்லது மாநகராட்சி சட்டப்படி உரிமம் பெற வேண்டியது கட்டாயம்.ஆனால், தற்போது சென்னையில் இயங்கி வரும் தங்கும் விடுதிகளில், சில மட்டுமே, அந்த சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ளன.
சென்னை மாநகராட்சி மூலம், இதுவரை தங்கும் விடுதிகளுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. தற்போது, அவற்றுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என, அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், 30 வகையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
என்னென்ன நிபந்தனைகள்?
விடுதி அமைந்துள்ள சூழல், குப்பை, கழிவுநீர், குடிநீர் போன்ற விஷயங்களை கையாளும் முறை குறித்து, விண்ணப்பத்தில் தெரியப்படுத்த வேண்டும்.விடுதியின் முழு உட்புற தோற்றம், வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும் விடுதி கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பற்றிய பட்டியல் இணைக்கப்பட வேண்டும்.அறையின் அளவில், 10 சதவீதம் காற்று வசதிக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஒரு நபர் தங்கும் அறை, 40 சதுர அடி இருக்க வேண்டும். விடுதி கட்டடம் முழுவதுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வண்ணம் பூச வேண்டும்.கொசு உற்பத்தி இல்லாமல் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க வேண்டும்.
ஆண், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறைகள் இருக்க வேண்டும். அவை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்.
தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் வர, வழி இருக்க வேண்டும். தீயணைப்பு துறை உரிமம் பெற வேண்டும்.
மின் துாக்கி இருந்தால், அதற்கு முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.தரைத் தளத்தில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் சறுக்கு பாதை வசதி செய்திருக்க வேண்டும்.வாகன நிறுத்துமிட வசதி இருக்க வேண்டும்.அரசு அறிவுறுத்தலின் படி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.
மாநகர காவல் துறை ஆணையர், போக்குவரத்து காவல்துறையிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
விடுதிகளின் கதி என்ன?
உரிம கட்டணம் எவ்வளவு என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 101ன்படி உரிமம் பெற்று இருந்தால், அந்த விடுதிகள் மாநகராட்சி உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை. மாநகராட்சி விதித்துள்ள நிபந்தனைகளின்படி பார்த்தால், தற்போது இயங்கி வரும் விடுதிகளில் ஒரு சில மட்டுமே உரிமம் பெற தகுதியானவை. பெரும்பாலான விடுதிகள் நிபந்தனைகளுக்கு மாறாகவே உள்ளன. குறிப்பாக, பல விடுதிகளில் சுகாதாரம் இல்லை. இதனால் இதுபோன்ற விடுதிகள் இழுத்து மூடப்படுமா அல்லது வருவாய் கிடைத்த வரை போதும் என, கேட்பவர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உரிமம் யாருக்கு?
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தங்கும் விடுதிகளுக்கு உரிமம் வழங்கும் விஷயத்தில் தெளிவான உத்தரவு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. முதல்கட்டமாக சுற்றறிக்கை மட்டுமே அனுப்பி உள்ளனர்.கட்டண விவரங்கள் இனி தான் தெரியவரும். முதலில் அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பேரில் விண்ணப்பிக்கும் விடுதிகளுக்கு ஆய்வுகளின் அடிப்படையில் உரிமம் வழங்கப்படும்.உரிமம் பெறாத விடுதிகள் பின்னர் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை முறைப்படுத்தவோ, இழுத்து மூடவோ நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
ஏன் இந்த குழப்பம்?
தங்கும் விடுதிகளுக்கான உரிமம் வழங்குவதில் வருவாய், சுகாதார துறை இடையே குழப்பம் நிலவுகிறது. பொதுவாக சுகாதாரம் சம்பந்தப்பட்ட உணவகம், தங்கும் விடுதிகள் போன்றவைகளுக்கு மாநகராட்சி சுகாதார துறை மூலமாக உரிமம் வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போது வருவாய் துறை உரிமம் வழங்குகிறது.
இதுகுறித்து, கடந்த ஆண்டு கமிஷனராக இருந்த கார்த்திகேயன், தங்கும் விடுதிகளுக்கு சுகாதார துறை உரிமம் வழங்க பரிந்துரைத்தார்.
ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 2007ம் ஆண்டு பணியில் இருந்த கமிஷனரின் செயல்முறை ஆணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய உரிமம் வழங்குவதற்கான பரிந்துரையை வருவாய், சுகாதார துறையில் யார் செய்வர் என்பதில் குழப்பம் நிலவுகிறது.