தினமலர் 21.10.2013
பேருந்து சாலைகளை துல்லியமாக அளவிடுகிறது மாநகராட்சி
சென்னை:சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து சாலைகளின் அமைப்பை, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக அளவு செய்து, வரைபடம் தயாரிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 460 பேருந்து சாலைகள், 353 கி.மீ., துாரத்திற்கு உள்ளன. இந்த சாலைகளின் அமைப்பு, நீளம், அகலம், நடைபாதை விவரம், சாலை தடுப்பு அளவு போன்ற விவரங்கள் தற்போது மாநகராட்சி வசம் துல்லியமாக இல்லை.
இதனால் புதிய திட்டங்களுக்கு மதிப்பீடுகள் தயார் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
சென்னையில் பேருந்து சாலைகளை, கிரானைட் நடைபாதைகள் அமைத்து உலக தரத்திற்கு மாற்ற மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்கு, சாலைகளின் வடிவமைப்பை துல்லியமாக அளவிட வேண்டியது அவசியமாக உள்ளது. இதனால், மாநகராட்சி, ‘லிடார்’ (light detecting and ranging) என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் இப்பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 47 லட்சம் ரூபாய்க்கு மாநகராட்சி ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
லிடார் தொழில்நுட்பத்தில் மென்பொருள் மூலம், ஒரு சாலையின் நீளம், அகலம், சாலையின் உள்ள கட்டடங்கள் எண்ணிக்கை, அதன் அமைப்பு உட்பட, அனைத்து விவரங்களையும் துல்லியமாக பெற முடியும். இவ்வாறு, ஒவ்வொரு சாலைகளின் விவரமும் வரைபடமாக தயாரிக்கப்பட உள்ளன. இந்த விவரங்களை பொறுத்தே, கிரானைட் நடைபாதை பணிகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட உள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் சாலைகள் உலக தரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கு ஒவ்வொரு சாலைகளின் அமைப்பையும் துல்லியமாக அளவிடுவது அவசியம். இதற்காக புதிய தொழில்நுட்பத்தை மாநகராட்சி பயன்படுத்துகிறது. வி.ஐ.பி.,க்கள் உள்ள சாலைகளும், பேருந்து சாலைகளும் இப்பணிகளுக்கு முதலில் தேர்வு செய்யப்படும். படிப்படியாக மாநகராட்சியின் அனைத்து சாலைகளிலும் உள்ள கேபிள் விவரங்கள் அறியப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.