மாநகராட்சி அதிகாரிகள் தென்கொரியா செல்ல அனுமதி
சென்னை:தென்கொரியாவில் நடைபெறும், சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இருவருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர், கமிஷனர், சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள சான் அந்தோணியா நகருக்கு பயணம் மேற்கொண்டனர். அடுத்த கட்டமாக மாநகராட்சி பொறியாளர்கள், சி.எம்.டி.ஏ., பொறியாளர்கள் சிங்கப்பூர், சீனா, ஹாங்காங் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரிய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான, ‘தி கொரியா டிரான்ஸ்போர்ட் இன்ஸ்டிடியூட்’ ஏழு நாட்களுக்கு, சர்வதேச மாநாட்டை, அந்த நாட்டின் தலைநகர் சியோலில் நடத்துகிறது. வரும் அக்., 13ம் தேதி முதல், 19ம் தேதி வரை இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இருவர் கலந்து கொள்ள மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி, தலைமை பொறியாளர் லெஸ்லி ஜோசப் சுரேஷ்குமார், பேருந்து சாலைகள் துறையின் மேற்பார்வை பொறியாளர் புகழேந்தி ஆகியோர், சியோல் செல்ல, உள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னை மாநகராட்சியில் உலக தரத்தில் சாலை அமைக்கும் திட்டம் உள்ளது. கொரியாவில் நடைபெறும் மாநாடு சாலை சம்பந்தமானது. இதனால், சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் இதில் கலந்து கொள்வது அவசியமானது.
இதற்கான செலவு முழுவதும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் ஏற்கும்,’ என்றார்.