தினமலர் 30.08.2013
ஐந்து மண்டலங்களில் 540 பேருக்கு பாதிப்பு மலேரியா : சுகாதார அலுவலர்களுக்கு மேயர் எச்சரிக்கை
சென்னை : சென்னை மாநகராட்சி பகுதியில், ஐந்து மண்டலங்களில், இதுவரை 540 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசுஉற்பத்தி அதிகரித்ததே அதற்கு காரணம் என்ற நிலையில், சுகாதார பணியாளர்கள் கூட்டத்தை கூட்டி மேயர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டு கொசு தொல்லை காரணமாக ‘டெங்கு’ காய்ச்சல் ஏற்படுத்திய பாதிப்பால், இந்த ஆண்டு முன்கூட்டியே விழிப்புணர்வு பிரசாரம், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் என, மாநகராட்சி பணியில் சுறுசுறுப்பு காட்டியது.10 மண்டலங்களில்…மழைநீர் வடிகால்வாய், நீர்வழித்தடம், வீடுகள் தோறும் சென்று கொசு மருந்து தெளிக்க ஒப்பந்த அடிப்படையில் மண்டல வாரியாக பணியாளர்களை நியமிக்கமாநகராட்சி அனுமதி வழங்கியது.
அதன்படி 80 வீடுகளுக்கு ஒரு பணியாளர் என, நியமனம் செய்து கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாகசென்னையில் கொசு தொல்லை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மலேரியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மணலி உட்பட சில மண்டலங்களை தவிர, 10க்கும் மேற்பட்ட மண்டலங்களில் மலேரியா காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் போன்ற நீர்வழித்தடங்களும், மழைநீர் வடிகால்வாய்களும் அதிகமாக உள்ள ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க., நகர், அடையாறு மண்டலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கடந்த ஒன்றரை மாதத்தில் ராயபுரம் மண்டலத்தில் 150 பேர், தேனாம்பேட்டையில் 130, அடையாறில் 80, கோடம்பாக்கத்தில் 70, திரு.வி.க., நகரில் 60, தண்டையார்பேட்டையில் 50 பேர் என, விரிவாக்க பகுதிகள் தவிர 540 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேரியா பரவி வருவதை தொடர்ந்து அந்தந்த மண்டலங்களில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்ந்து பரவாமல் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் தில்லுமுல்லு நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று முன்தினம் மாலை ரிப்பன் மாளிகையில் சுகாதார பணியாளர்கள் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது.
அதில், துணை கமிஷனர் (சுகாதாரம்), சுகாதார அதிகாரிகள், துப்புரவு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
கண்காணிப்பு இல்லை
- கொசு தொல்லை சம்பந்தமாக ‘1913’ புகார் பிரிவிற்கு அதிகமாக புகார்கள் வந்துள்ளன.
- புகார்கள் வந்த பகுதிகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கொசு மருந்து தெளிக்கப்பட்டதாக தவறான தகவலை ஊழியர்கள் பதிவு செய்கின்றனர்.
- கொசு மருந்து தெளிப்பது, புகை அடிப்பது போன்ற பணிகளை துப்புரவு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பதில்லை.
- தேவையான அளவில் ஒப்பந்த பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் உள்ளனரா என்பதையும் அதிகாரிகள் கண்காணிப்பதில்லை என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, அதிகாரிகளுக்கு மேயர் எச்சரிக்கை விடுத்தார்.
ஒழுங்கு நடவடிக்கை
இதுகுறித்து கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சுகாதாரத்தின் தலைநகராக சென்னையை மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆனால், இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதை ஏற்று கொள்ள முடியாது.
தற்போதே கொசு தொல்லை குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. கொசு மருந்து தெளிக்கும் பணிகளை கண்காணிக்க வேண்டும். மருந்து இருப்பு விவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட வேண்டும்.
உபகரணங்கள், கூடுதல் பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும். சுகாதார விஷயத்தில் இந்த நிலை தொடர்ந்தால், பாதிப்பு உள்ள பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மேயர் எச்சரிக்கை விடுத்தார்.
அதேநேரம், கூட்டம் என்ற பெயரில் தங்களை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக, சுகாதார பணியாளர்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
தற்போதைய மலேரியா பாதிப்பு கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது குறைவு தான். சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான கள ஆய்வு பணிகளில், சுகாதார ஆய்வாளர்களும், துப்புரவு அலுவலர்களும் தான் ஈடுபடுகின்றனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாக ஆய்வு கூட்டங்களுக்கு சென்று வரத்தான் எங்களுக்கு நேரம் சரியாக உள்ளது. முறைப்படி எங்களை வேலை வாங்க வேண்டியது, அறிவுரைகளை வழங்க வேண்டியது மண்டல சுகாதார அதிகாரிகள் தான்.
ஆனால், தினசரி ரிப்பன் மாளிகையிலும், வட்டார இணை கமிஷனர்கள் அலுவலகத்திலும் சுகாதாரம் சம்பந்தமான ஆய்வு கூட்டங்களுக்கு துப்புரவு அலுவலர் களையும், சுகாதார ஆய்வாளர்களையும் அழைக்கின்றனர்.
ஒரு ஆய்வு கூட்டத்தில் பாதிநாள் கழிந்து விடுகிறது. வாரம் ஆறு கூட்டங்களுக்கு குறையாமல் நடத்துகின்றனர். நிலைமை இப்படி இருக்க, கள ஆய்வு எப்படி நடக்கும்? தகவல் பரிமாற்றத்திற்கு வயர்லெஸ், அலைபேசி, இ-−மெயில் என, எத்தனை வசதிகள் இருந்தாலும், அலுவலர்களை அலைய வைப்பதில் தான் அதிகாரிகள் குறியாக உள்ளனர். இவ்வாறு சுகாதார பணியாளர்கள் தெரிவித்தனர்.