‘சென்னை மாநகராட்சியை கன்டோன்மென்ட் பின்பற்றும்’
சென்னை:”மாநகராட்சியில் நடைபெறும் பல்வேறு மேம் பாட்டு திட்டங்களை முன்னுதாரணமாக கொண்டு, கன்டோன்மென்ட் பகுதியிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்,” என, கன்டோன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி பிரபாகர் கூறினார்.
பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கன்டோன்மென்ட் கழகத்திற்கு உட்பட்ட பகுதியில், ஏழு வார்டுகள் உள்ளன. இங்கு, ராணுவத்தினர் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள 62 கன்டோன்மென்ட்டுகளில் சென்னை கன்டோன்மென்ட்டும் ஒன்று. இதில், முதல் முதலாக ஆதார் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம், நாளை துவங்கி அடுத்த மாதம், 11ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து, கன்டோன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி பிரபாகர் கூறியதாவது: ஆதார் அட்டை சிறப்பு முகாமில், கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு, விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்கள், கன்டோன்மென்ட் பகுதிவாசிகளுக்கு சென்றடைய, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.