தினமலர் 12.07.2013
அரசு மருத்துவமனைகளில் ‘அம்மா’ உணவகம் விரைவில் துவங்க ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:சென்னை அரசு பொது மருத்துவமனை உட்பட ஆறு அரசு மருத்துவமனை வளாகங்களில் மலிவு விலை உணவகம் துவங்க மாநகராட்சி சுகாதார துறையினர் தீவிரமாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
விரைவில் துவக்கம்.
சென்னையில் தற்போது 200 மலிவு விலை உணவகங்கள் செயல்படுகின்றன. அவை தவிர, ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உணவகம் அமைக்க, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இன்னும் ஒரு வாரத்தில் அந்த பணிகள் முடிந்து, முதல்வர் உணவகத்தை துவக்கி வைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதை தவிர, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களில் மலிவு விலை உணவகம் துவங்க மாநகராட்சி சுகாதார துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக அந்த ஐந்து மருத்துவமனை நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மருத்துவமனைகளிலும், மாநகராட்சி சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினர்.
அதில், உணவகத்திற்கு புதிய கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் கட்டுமான பணிகள் துவங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மறு ஒப்பந்தம்
சென்னையில் கூடுதலாக 200 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு வார்டிலும், காலியாக உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உணவகத்திற்கு புதிய கட்டடம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகளில் லாபம் இல்லை என்பதால், அந்த பணிகளை எடுத்து செய்வதில் பல இடங்களில் ஒப்பந்ததாரர்கள் முன் வரவில்லை. இதனால் உணவக கட்டுமான பணிகளுக்கு மறுஒப்பந்தம் கோரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘கட்டடங்கள் தயாரான பிறகு தான் கூடுதல் உணவகங்கள் திறக்கப்படும். சென்னையில் ஆயிரம் மலிவு விலை உணவகங்கள் அமைக்க வேண்டும் என்பது மாநகராட்சியின் இலக்கு. கூடுதலாக 200 உணவகங்கள் விரைவில் அமையும்’ என்றார்.
கவுன்சிலர்கள் தலையீடு
சென்னையில் இயங்கி வரும் மலிவு விலை உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் உளவு துறை போலீசார் விசாரித்து, அறிக்கை தயாரித்துள்ளனர்.
உணவகங்கள் துவங்கப்பட்ட போது இருந்த வரவேற்பு, தற்போதும் உள்ளதா என்று அறிய இந்த அறிக்கையை அரசு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில் உணவகத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருவதாகவே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உளவு துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அதே நேரம், சில உணவகங்களில் உள்ள நிர்வாக பிரச்னைகள், கவுன்சிலர்கள் தலையீடு குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.