தினமணி 27.03.2010
அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வீடு கட்ட அனுமதி இல்லை
ஒசூர், மார்ச் 26: ஒசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் அங்கீகரிப்படாத லே–அவுட் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க இயலாது என தமிழக நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் தெரிவித்தார்.
ஒசூர் புதுநகர் வளர்ச்சிக் குழும அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒசூர் புதுநகர் வளர்ச்சி குழு அலுவலகத்தில் விண்ணபித்த 30 நாள்களுக்குள் லே–அவுட் ஒப்புதல் மற்றும் கட்டுமானத் திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கப்படும்.
ரூ.2 கோடி நிதியில் ஒசூர் ராமநாயக்கன் ஏரி தூர்வாரி, பூங்கா அமைக்கப்படும். ஆலவப்பள்ளி, என்.ஜி.ஒ. காலனியில் பூங்கா ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றார். ஒசூர் ராஜகால்வாயை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஒசூர் நகரமன்றத் தலைவர் எஸ்.ஏ.சத்யா மனு அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், ஒசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம், மத்திகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.