அசத்தல் வரி வசூல் பணியில் அஸ்தம்பட்டி மண்டலம்… மேயர், துணை மேயர் மண்டலத்துக்கு கடைசி இடம்
சேலம்: சேலம் மாநகராட்சியில், வரி வசூல் மூலம் அதிக வருவாய் ஈட்டிய சாதனையை, கடந்த ஆண்டு அஸ்தம்பட்டி மண்டலம் தட்டி சென்றுள்ளது. மேயர், துணை மேயர் ஆகியோர் வசிக்கும் கொண்டலாம்பட்டி மண்டலம், கடைசி இடம் பிடித்தது.
சேலம் மாநகராட்சியில், வரி இனங்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களில், அதிகளவில் கடைகள், வாரச்சந்தைகள் உள்ளிட்ட வரி இனங்கள் இருந்தபோதும், கடந்த ஆண்டு வரி வசூலில் மிகவும் பின் தங்கியுள்ளது.
கடந்த, 2012-13 ம் ஆண்டு சூரமங்கலம் மண்டலத்தில், சொத்துவரி மூலம், நான்கு கோடியே, 81 லட்சத்து, 69 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம், நான்கு கோடியே, 48 லட்சத்து, 7,000 ரூபாய், தொழில் வரி மூலம், ஒரு கோடியே, 95 லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி கடைகள் மூலம், 89 லட்சத்து, 92 ஆயிரம் ரூபாய், குத்தகை இனங்கள் மூலம் ஒரு கோடியே 60 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், ஆக மொத்தம் 13 கோடியே 75 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அஸ்தம்பட்டி மண்டலத்தில், சொத்து வரி மூலம், ஆறு கோடியே, 55 லட்சத்து, 46 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம், நான்கு கோடியே, ஆறு லட்சம் ரூபாய், தொழில் வரி மூலம், மூன்று கோடியே, 53 லட்சத்து, 41 ஆயிரம் ரூபாய், கடைகள் மூலம், 10 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய், குத்தகை இனங்கள் மூலம், 15 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய், ஆக மொத்தம், 14 கோடியே, 41 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கொண்டலாம்பட்டி மண்டலத்தில், சொத்துவரி மூலம், நான்கு கோடியே, 61 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம், மூன்று கோடியே, 50 லட்சத்து, 66 ஆயிரம் ரூபாய், தொழில் வரி மூலம், 96 லட்சத்து, 76 ஆயிரம் ரூபாய், கடைகள் மூலம் ஒரு லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய், குத்தகை இனங்கள் மூலம், 36 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய், ஆக மொத்தம், ஒன்பது கோடியே, 46 லட்சத்து, 88 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 57 வது வார்டிலும், துணை மேயர் நடேசன், 50 வது வார்டிலும் வசித்து வருகின்றனர். மேயர், துணை மேயர் இருவரும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் இருந்தபோதும், வரி வசூல் பணியை அவர்கள் துரிதப்படுத்துவதில், ஆர்வம் காட்டவில்லை.