தினமணி 19.12.2009
அடையாற்றில் கலக்கும் கழிவு நீர் நிறுத்தம்

சென்னை, டிச.18: “”சென்னையில் அடையாறு ஆற்றில் கலக்கும் கழிவு நீர் முழுவதுமாக நிறுத்தப்படும்” என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் கழிவு நீர் இறைக்கும் நிலையத்தை மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது, அவர் கூறியது:
இந்தத் திட்டத்தின் மூலம், தொழிற்பேட்டையின் கழிவுநீர் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு, கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.
இதன் மூலம், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள 610 தொழிற்சாலைகளும், தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வாழும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் பயனடைவர். இதுவரை, கிண்டி தொழிற்பேட்டை கழிவுநீர் இறைக்கும் நிலையத்தில் இருந்து அடையாறு ஆற்றில் கலந்து வந்த கழிவுநீர் முழுவதுமாக நிறுத்தப்படும்.
இந்தத் திட்டத்தால், அடையாறு ஆற்றில் 7 வழித் தடங்கள் மூலம் கலந்து வந்த கழிவுநீர் தடுக்கப்பட்டுள்ளது” என்றார் ஸ்டாலின்.
கிண்டி தொழிற்பேட்டை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.2.57 கோடியும், சென்னை குடிநீர் வாரியம் சார்பாக ரூ.4.77 கோடி பங்களிப்புடன் கழிவு நீர் இறைக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.