தினமணி 21.10.2010
அண்ணா நூற்றாண்டு விழா வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வுகாஞ்சிபுரம்
, அக். 20: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் அண்ணா நூற்றாண்டு விழா வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி புதன்கிழமை ஆய்வு செய்தார். ÷அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழக அரசு காஞ்சிபுரம் நகரின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கியது. இதில் செவிலிமேடு பேரூராட்சியில் ரூ. 25 லட்சம் செலவில் நடைபெறும் பல்லவன் நகர் பூங்கா மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி ஆய்வு செய்தார். கூடுதல் விளையாட்டு பொருள்களையும், பொதுமக்கள் அமருவதற்காக கூடுதலாக பெஞ்சுகள் அமைக்கவும், தண்ணீர் தொட்டிக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கவும் உத்தரவிட்டார்.÷
பல்லவன் நகர்– திருப்பருத்திக்குன்றம் இணைப்புச் சாலையை மேம்படுத்த அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். காந்தி சாலை மேம்பாட்டு பணிகள், கே.எம்.வி.நகர் நகராட்சி பூங்கா, வரதராஜ பெருமாள் கோயில் சன்னதி தெருவில் போடப்பட்ட சிமென்ட் சாலை பணிகள், ரயில்வே சாலையில் போடப்பட்டுள்ள சிமென்ட் சாலைப் பணிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ. 1.32 கோடியில் கட்டப்பட்டு வரும் நீச்சல் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ÷காமாட்சியம்மன் கோயில் சன்னதி வீதி சிமென்ட் சாலைப் பணிகள், ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி வீதி சிமென்ட் சாலை பணிகள், சர்வ தீர்த்தகுளம் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்கக் கூறினார்.÷
இந்த ஆய்வின்போது செவிலிமேடு பேரூராட்சித் தலைவர் எஸ்.எம். ஏழுமலை, பேரூராட்சி உதவி இயக்குநர் (பொ) சந்திரசேகரன், செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத் தலைவர் விசுவநாதன், நகராட்சி ஆணையர் ரா. மோகன், நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.