அனுமதி பெறாத கட்டடங்களை இடிக்க உத்தரவு
மேலூரில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா கேட்டுக் கொண்டார்.
மேலூர் நகராட்சிப் பகுதிக்கான மக்கள் குறைகேட்புநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆட்சியரிடம், 300-க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். அவற்றின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து முதற்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. பின்னர் அரசு புறம்போக்கு, கண்மாய்களில் அடுóககி வைக்கப்பட்ட கற்கள் எண்ணப்பட்டு, சரியாக அளந்து மதிப்பிடப்பட்டன. இவைகளை இ-டெண்டர் மூலம் ஏலத்தில் விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் நிலங்களில் அடுக்கி வைத்துள்ள கற்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால், அவற்றையும் கைப்பற்ற தொடர் நடவடிக்கைகள் நீதிமன்றம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நான்குவழிச் சாலையில் விபத்துகளைத் தடுக்க, கிராமச் சாலைகள் சந்திப்பில் சோலார் விளக்குகளை ஊராட்சிகள் மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் மேலூர் பெரிய கடை வீதிப் பகுதியில் ஆய்வு செய்த ஆட்சியர், அனுமதி பெறாத, தெருக்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நகராட்சியில் சில கோப்புகளை, ஆட்சியர் ஆய்வு செய்ததில் கட்டட அனுமதி அளித்தது, வரி விதிப்பில் தவறுகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, வேறு நகராட்சி அலுவலர்களை வைத்து கோப்புகளை ஆய்வு செய்து, தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
நகராட்சித் தலைவர் பங்கேற்கவில்லை:
ஆட்சியர் பங்கேற்ற இக்குறைகேட்புக் கூட்டத்தில் நகராட்சித் தலைவர், கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலூர் நகராட்சி ஆணையர் பாஸ்கர சேதுபதி கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையராக அலாவுதீன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.