தினமணி 13.08.2012
அனுமதி பெறாத செல்போன் கோபுரங்களுக்கு சீல்: கிழக்கு தில்லி மாநகராட்சி அறிவிப்பு
புது தில்லி, ஆக. 12: அனுமதி பெறாத செல்போன் கோபுரங்களுக்கு சீல் வைக்க கிழக்கு தில்லி மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சியின் நிலைக் குழுத் தலைவர் மெஹக் சிங் கூறுகையில் “”கிழக்கு தில்லி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் அனுமதி பெறாமல் பொருத்தப்பட்டு இயங்கி வரும் செல்போன் கோபுரங்கள் குறித்த தகவல்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அதில் தில்லி முழுவதும் சுமார் 3000 கோபுரங்களுக்கு மாநகராட்சியின் அனுமதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களின் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மொபைல் கோபுரங்கள் நிர்மாணிக்க மாநகராட்சியின் அனுமதி பெற வேண்டும் என்று மாநகராட்சி மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். செல்போன் கோபுரங்கள் அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதன் மூலம் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.தலைநகர் தில்லி முழுவதும் உள்ள செல்போன் கோபுரங்கள் குறித்த ஆய்வு 2010-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
அதில் 5362 செல்போன் கோபுரங்கள் இருப்பதும், அவற்றில் 2952 செல்போன் கோபுரங்கள் முறையான அனுமதியின்றி இயங்குவதும் கண்டறியப்பட்டது.
கிழக்கு தில்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 700 செல்போன் கோபுரங்கள் இருக்கும் எனவும், அவை 2010-ம் ஆண்டுக்கு பிறகு 900 ஆக அதிகரித்திருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களை தெரிவிக்க மண்டல அதிகரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதி பெறாத செல்போன் கோபுரங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, சீல் வைக்கப்படும்.
மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாதவற்றை விரைவில் அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.