தினமலர் 07.01.2010
அனுமதியின்றி அமைத்த மனைகளை வாங்க கூடாது! ஆற்காடு நகராட்சி சேர்மன் வேண்டுகோள்
ஆற்காடு:”ஆற்காட்டில் நகராட்சி அனுமதி இல்லாமல் போடப்பட்ட வீட்டு மனைகளை பொதுமக்கள் வாங்கக்கூடாது‘ என நகராட்சி கூட்டத்தில் சேர்மன் கூறினார்.ஆற்காடு நகராட்சி கூட்டம் சேர்மன் ஈஸ்வரப்பன் தலைமையில் நடந்தது. நகராட்சி துணை தலைவர் ராஜசேகரன், ஆணையர் பாரிஜாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், அதிகாரிகளிடையே நடந்த விவாதம்:
நடராஜ் (திமுக): 5 ஆண்டுகளாக குழாய்வரி கட்டாமல் இருக்கிறார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
ரகுநாதன் (அதிமுக): எனது பகுதியில் உள்ள சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதே நிலை ஏற்பட்டால் பிணத்தை புதைக்க கூட இடம் கிடைக்காது.
தலைவர்: அந்த சுடுகாட்டுக்கு உடனடியாக சென்று, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜி (அதிமுக): பூங்காக்கள் பராமரிக்க 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதை அந்த இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்டினால் நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும்.
தலைவர்: பூங்காக்கள் உள்ள இடத்தில் “காம்ப்ளக்ஸ்‘ கட்ட முடியாது. மேலும், ஆற்காட்டில் மாலை நேரங்களில் பொழுதுபோக்க எந்த இடமும் இல்லை.
கஸ்தூரி (சுயே.,): எனது வார்டுக்கு இதுவரையில் 11 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என வார்டு மக்கள் சார்பில் சேர்மனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜா (சுயே.,): பூங்காவை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் எழுப்பி பாதுகாக்க வேண்டும்.செல்வரசு (அதிமுக): ஆற்காட்டில் உள்ள 15 வார்டுகளுக்கு தெரு விளக்குகள் பராமரிக்கும் பணியை தனியாருக்கு, விதிக்குட்பட்டு ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளீர்கள். அது என்ன விதி என்பதை உறுப்பினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
செல்வம் (பாமக): என் வார்டில் சிமென்ட் சாலை போட டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் வேலை எடுத்தவர் அந்த சாலையை கொத்தி, அதில் இடிக்கப்பட்ட கட்டடங்களின் தூள்களை கொட்டி அதன் மீது சிமென்ட் கலவை போட முற்பட்டதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த பணியை நிறுத்தி விட்டார்கள். சிமென்ட் சாலை போடுவதை அதிகாரி சென்று பார்வையிடுவதே இல்லை. பார்வையிட்டு இருந்தால் இதுபோல் மோசடியான வேலை நடப்பதற்கு வழியில்லை.
சுந்தரம் (சுயே.,): ஆற்காட்டில் பல இடங்களில் அனுமதி இல்லாமல் செல்போன் டவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு இடிதாங்கி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மேலும் அதற்கு நகராட்சி வரி போட வேண்டும். ஆற்காட்டில் தற்போது அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு பலர் இறந்து விடுகிறார்கள். அதனால் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாகனங்கள் நகருக்குள் “ஏர் ஹாரன்‘ அடிக்க கூடாது என்ற விதி இருந்தும், அதை யாரும் மதிப்பது இல்லை. சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர்கள் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.
சண்முகம் (அதிமுக): ஆற்காட்டில் பல இடங்களில் அனுமதி இல்லாமல் வீட்டு மனைகள் விற்கப்படுகிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
தலைவர்: அனுமதி இல்லாமல் வீட்டு மனைகளை வாங்க கூடாது என்று பத்திரிகைகள் மூலமும், சம்பந்தப்பட்ட இடங்களில் போர்டுகள் வைத்தும் பொதுமக்களை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மீண்டும், நகராட்சி அனுமதி இல்லாமல் விற்கப்படும் வீட்டு மனைகளை பொதுமக்கள் வாங்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில், ஆற்காடு போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள ஆடு அறுக்கும் தொட்டி இருந்த இடத்தில் நகராட்சி ஆணையர், பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் மற்றும் துப்புரவு அலுவலர்களுக்கு அரசின் நிதியுதவியுடன் குடியிருப்புகள் கட்டுவது என்றும், ஆற்காடு நகரில் உள்ள வடமேற்கு பகுதியிலும், பாலாற்றங்கரை ஓரமாகவும், ஏரிக்கரை அருகிலும் காரிய மேடைகள் கட்டுவது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.