தினமலர் 08.11.2010
அமைச்சர் பயன்படுத்தி வரும் காருக்கு அபராதம் செலுத்திய மாநகராட்சி
சேலம் : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பயன்படுத்தி வரும், மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான காரை முறைப்படி பதிவு செய்யாமல் இயக்கியதால், நேற்று காலதாமத அபராத கட்டணமாக, 68 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. மேலும், காருக்கான பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஆட்சியில், சேலம் மாநகர மேயராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேஷ்குமார் இருந்தார். அப்போது, மேயருக்கு புதிய கார் வழங்குவதற்கான தீர்மானம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,வைச் சேர்ந்த ரேகா பிரியதர்ஷினி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 2007ல் புதிய இன்னோவா கார் சேலம் மாநகராட்சிக்கு வந்தது. மேயருக்காக வழங்கப்பட்ட கார், வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது. அவர், சேலத்தில் அந்த காரைத் தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளாக, அந்த காரில் தான் தேசியக்கொடியை பறக்கவிட்டபடி, அமைச்சர் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான காரை அமைச்சர் பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சருக்கென கலெக்டர் அலுவலகத்தில் வி.ஐ.பி., கார் உள்ளது. அதை விடுத்து, அமைச்சர் பயன்படுத்தும், மேயருக்காக ஒதுக்கப்பட்ட டி.என்.30 ஏஏ 9559 என்ற பதிவு எண்ணுடன் உள்ள கார், முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இந்த கார் சேலம்(மேற்கு) ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் முன்தொகை செலுத்தி, நம்பரை மட்டுமே வாங்கி வைத்திருக்கிறது என தெரியவந்துள்ளது.இப்பிரச்னை குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவும் குற்றம்சாட்டினார். அரசு தரப்பில் இதற்கு எந்த விளக்கமும் தரவில்லை.
இந்நிலையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று, அமைச்சர் பயன்படுத்தி வரும் காரை முறைப்படி பதிவு செய்தனர். சேலம் மேற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அதற்கு பதிவு மற்றும் அபராத கட்டணமாக ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 788 ரூபாய் செலுத்தியுள்ளனர். அதில், காலதாமதமாக பதிவு செய்வதற்கான அபதார கட்டணம் மட்டும் 68 ஆயிரம் ரூபாய். இத்தொகை, “செக்‘காக மாநகராட்சி நிதியிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது.