அம்மா உணவகங்களில் ஒரு வாரத்தில் கறிவேப்பிலை சாதம், பொங்கல்
சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் ஒரு வாரத்துக்குள் பொங்கல், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மலிவு விலை அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த உணவகங்களில் இப்போது இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அம்மா உணவகங்களில் கூடுதலாக சாத வகைகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், அம்மா உணவகங்களில் பொங்கல், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், சப்பாத்தி போன்றவை வழங்கப்படும் என்று முதல்வர் அண்மையில் அறிவித்தார். இதில் சப்பாத்தி வரும் செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பொங்கல், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை ஒரு வாரத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: அம்மா உணவகங்களில் கறிவேப்பிலை சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் தயாரிப்பதற்கான பயிற்சிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சிகள் இரண்டு நாள்களில் முடிந்துவிடும்.
இந்த சாத வகைகளை இன்னும் ஒரு வாரத்துக்குள் அம்மா உணவகங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் முதல் சப்பாத்தி வழங்கப்படும். இதற்காக சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதலாக இட்லி தயாரிக்க பயன்படும் உபகரணங்களை கொள்முதல் செய்யவும் டெண்டர் வெளியிடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓரிரு மாதங்களில் சுகாதார ஆய்வாளர்கள்: மேலும் அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனித்துறை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி அம்மா உணவகங்களைக் கண்காணிக்க மட்டும் தனியாக சுகாதார ஆய்வாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்கு அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.