அம்மா உணவகத்தில் ஆட்சியர் ஆய்வு
மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகத்தில் திருப்பூர் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பூரில் வளர்மதி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசியின் தரத்தை ஆட்சியர் ஆய்வு செய்து, அரிசி இருப்பு, விற்பனை குறித்து கேட்டறிந்தார்.அதன் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் ரேஷன் பொருள்கள் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, தென்னம்பாளையம் வாரச்சந்தை அருகே மாநகராட்சி சார்பில் புதிதாக துவங்கப்பட்ட மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அதன்பின், பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில் “அம்மா’ திட்ட முகாமில் ஆட்சியர் பங்கேற்றார். இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தாராபுரம் மானூர்பாளையத்தில் நடந்த “அம்மா’ திட்ட முகாமிலும் பங்கேற்று, சாதிச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமானச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார் .
இதில், எம்எல்ஏ கே.பி.பரமசிவம் (பல்லடம்), மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.சண்முகம், குண்டடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கவேல், வட்டாட்சியர்கள் சிவசுப்பிரமணியம், நல்லசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.