தினமணி 08.04.2010
அயோடின் கலக்காத உப்பு பறிமுதல்
வேதாரண்யம், ஏப். 7: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அயோடின் கலக்காத போலி உப்பு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேதாரண்யத்தில் அயோடின் உப்பு உற்பத்தி நடைபெறும் பகுதியில் நாகை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ப.வைரமணி தலைமயில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பறிமுதல் செய்யப்பட்ட உப்பு வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன் பரிசோதனை செய்யப்பட்டபோது அவற்றில் அயோடின் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நகர்மன்றத் தலைவர் மா.மீனாட்சிசுந்தரம், நகராட்சி செயல் அலுவலர் மு. வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இவை அழிக்கப்பட்டன.
இதுகுறித்து துணை இயக்குநர் வைரமணி கூறியது: முதல் கட்டமாக எச்சரிக்கை செய்யப்படுகிறது. இனிமேலும் இது தொடர்ந்தால் காவல் துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அயோடின் உள்ளதா என்பதை பரிசோதித்து கடைகாரர்கள் விற்பனைக்கு வாங்க வேண்டும். தவறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.