அரக்கோணம் நகரில் விரைவில் நவீன எரிவாயு தகனமேடை திறப்பு’
அரக்கோணத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் நவீன எரிவாயு தகனமேடை விரைவில் திறக்கப்படும் என நகர்மன்றத் தலைவர்(பொறுப்பு) கே.ராஜா தெரிவித்தார்.
அரக்கோணம் நகரில் ரூ.60 லட்சத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. முன்பு கொண்டு வரப்பட்ட புகைப்போக்கி சரியில்லாததால், அது நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், புதியதாக 100 அடி உயர புகைப்போக்கி அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பணியை கே.ராஜா, நகராட்சி பொறியாளர் ராஜவிஜயகாமராஜ், உதவி பொறியாளர் ஜெயபால், நகர்மன்ற உறுப்பினர் பார்த்தசாரதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கே.ராஜா தெரிவிக்கையில், புகைபோக்கி அமைக்கப்பட்டுவிட்டது.
இதையடுத்து, எரிவாயு விநியோகக் குழாய்கள் மற்றும் தகனமேடை இணைப்பு பணிகள் முடிவடைந்ததும் கட்டட இறுதிகட்ட பணிகளுக்கு பிறகு திறப்பு விழா விரைவில் நடைபெறும் என்றார்.