அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
ஆலங்காயத்தில் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் பொ.சங்கர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே ரூ.5 லட்சத்தில் 5,000 லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கால்வாயில் மழைக்காலங்களில் நீர் வெளியேறுவதால் தூர்வாரும் பணி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பேரூராட்சித் தலைவர் மஞ்சுளா கந்தன் கோரிக்கை விடுத்தார். இப்பணி விரைவில் நடைபெறும் என ஆட்சியர் உறுதியளித்தார்.
இதையடுத்து, ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள நாயக்கனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி, காவலூரில் ரூ.1.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடம், ரூ.15.80 லட்சத்தில் அமைக்கப்படும் மந்தாரகுட்டை-ஆலங்காயம் சாலை ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், காவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகை பதிவேடு மற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது திட்ட அதிகாரி சீனிவாசன், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.கருணாமூர்த்தி, உமாதேவி, பேரூராட்சி செயல் அலுவலர் வே.கோபாலன், பேரூராட்சித் துணைத் தலைவர் பாண்டியன், ஒன்றிய உதவி பொறியாளர் அரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.