தினமணி 13.07.2009
அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச உடல் தகுதி அவசியம் – உச்ச நீதிமன்றம்
தினமணி 13.07.2009
அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்தரன், சதாசிவம் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர். ரயில்வே ஊழியர் தேவேந்திர குமார். இவருக்கு அண்மையில் பதவி உயர்வு வழங்க ரயில்வே துறை முடிவு செய்தது. அதற்காக உடல் தகுதி சான்றிதழ் கோரப்பட்டது. ஆனால் தேவேந்திர குமார் அளித்த உடல் தகுதி சான்றிதழின்படி நிர்வாகம் அளிக்கவிருந்த பதவிக்கு அவர் தகுதி அற்றவர் என்று ரயில்வே துறை தெரிவித்து, அவருக்கு பதவி உயர்வு தர மறுத்தது.
இதை எதிர்த்து தேவேந்திர குமார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். “”ரயில்வே துறையின் முடிவு உடல் தகுதியின் பேரில் எவரொருவருக்கும் பதவி உயர்வு மறுக்கப்படக்கூடாது என்ற ஊனமுற்றோர் சட்டப் பிரிவு 472-ஐ மீறுவதாக உள்ளது” என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உடல் ரீதியாக நன்றாக உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச உடல் தகுதி நிர்ணயித்துள்ளதை ஊனமுற்றவர்களுக்கும் கடைப்பிடிக்கக்கூடாது. எனவே, மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு அரசு துறை பாதுகாப்பாகவும், திறன்படவும் செயல்பட வேண்டுமானால் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச உடல்தகுதி என்பது அவசியம். உடல் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதை அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கருத முடியாது என்று உத்தரவு பிறப்பித்தது.