தினமலர் 06.03.2010
அரசு கள்ளர் பள்ளி விடுதிகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
கம்பம் : கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பபள்ளி, மாணவியர் விடுதிகளில் வரி நிலுவையை காரணம் காட்டி, குடிநீர் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.கம்பம் நகராட்சியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வரி வசூல் மந்தமான நிலையில் உள்ளது. குடிநீர் வரி நிலுவை அதிகமாக உள்ளது. சொத்து வரி மற்றும் தொழில்வரியும் கணிசமாக நிலுவை உள்ளது. மார்ச் இறுதிக்கும் வரிவசூலை முடிக்கவேண்டும் என்பதற்காக நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் குடிநீர் இணைப்பை துண்டிக்க சென்றனர். போக்குவரத்து கழகம் சார்பில் நான்கு லட்சம் ரூபாய் செலுத்தப் பட்டதையடுத்து துண்டிப்பு கைவிடப்பட்டது.
நேற்று காலை, அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி, கள்ளர் ஆரம்ப பள்ளி, வடக்குபட்டியில் உள்ள மாணவியர் விடுதி ஆகியவற்றில் நகராட்சி குடிநீர் பிரிவு பணியாளர்கள் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.
போலீஸ் குடியிருப்பு மற்றும் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றில் 20 ஆயிரம் ரூபாய் வரி பாக்கி இருந்தது. இரண்டு நாட்களில் செலுத்த ஏற்பாடு செய்வதாக இன்ஸ்பெக்டர் விநோஜி உறுதியளித்ததையடுத்து நகராட்சி பணியாளர்கள் திரும்பினர்.
கமிஷனர் அய்யப்பன் கூறுகையில், “வரி பாக்கி அதிகமாக வைத்துள்ள கள்ளர் மேல்நிலைப் பள்ளி, ஆரம்பபள்ளி, மாணவியர் விடுதிகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எந்த அரசு அலுலகமாக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.