தினமலர் 14.08.2012
அரசு மருத்துவமனைக்கு முறையான குடிநீர் சப்ளை
சேலம்: “சேலம் மாநகராட்சி சார்பில், அரசு மருத்துவமனைக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது” என, சேலம் மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.”சேலம், அரசு மருத்துவமனை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும் சேர்ந்து, தினசரி, 3.5 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்ய, சேலம் மாநகராட்சிக்கு, 4.15 லட்சம் ரூபாய் டிபாஸிட் செலுத்தி, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.'”இதுதொடர்பாக, பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் பலன் இல்லை. அதேப்போல, ஏற்கனவே, இருந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தமிழரசு, பல முறை மாநகராட்சிக்கு கடிதம் எழுதியும், கண்டு கொள்ளவில்லை. தற்போதுள்ள செயற்பொறியாளர் கலையரசன் தொலைபேசியில் புகார் செய்தும், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது’ என, மாநகராட்சி நிர்வாகத்தின் மீது, அரசு மருத்தவமனை, டீன் வள்ளிநாயகம் குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்த செய்தி, நேற்று “காலைக்கதிர்’ நாளிதழிலில் வெளியானது.இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட விளக்க அறிக்கை:சேலம் மாநகராட்சியில் இருந்து, நாள்தோறும் அரசு மருத்துவமனைக்கு, 41 ஆயிரம் லிட்டர் குடிநீர், லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு லாரிகளுக்கு வாடகையாக, 3,500 ரூபாய் நிர்ணயம் செய்து, ஒரு லட்சத்து, ஐந்தாயிரம் ரூபாய் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனை வளாக பகுதிகளில், ஏற்கனவே உள்ள ஆறு குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் சராசரியாக, நாள் ஒன்றுக்கு, 36 ஆயிரம் லிட்டர் குடிநீர் தினசரி வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், இரண்டு பெரிய இணைப்புகள் கூடுதலாக வழங்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 31 ஆயிரம் லிட்டர் வீதம், நான்கு நாட்களுக்கு ஒரு முறை மொத்தமாக, ஒரு லட்சத்து, 25 ஆயிரம் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.லாரி மூலமும், குடிநீர் இணைப்புகள் மூலமும், நாள் ஒன்றுக்கு, அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள, எட்டு தரை தள தொட்டிகளுக்கு, ஒரு லட்சத்து, 8,000 லிட்டர் வழங்கப்படுகிறது.
மேலும், பொதுமக்களிடம் இருந்து குடிநீர் இணைப்புகளுக்காக பெறப்படும் வைப்பு தொகையை போலவே, அரசு தலைமை மருத்துவ மனை நிர்வாகமும், குடிநீர் இணைப்பு பெற்று, அதற்கான வைப்பு தொகையை செலுத்தியுள்ளது.மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரினை, குடிநீர் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே, பல முறை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், அரசு தலைமை மருத்துவமனையின், தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, குடிநீர் தேவை போக, பிற தேவைகள் (குளியல் அறை, கழிவறை மற்றும் இதர தேவைகள்) உள்ளிட்டவற்றுக்கு மருத்துவமனையை பராமரிக்கும், பொதுப்பணித் துறையினர், இதற்கு உண்டான மாற்று திட்டத்தை தயார் செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், உள் மற்றும் புற நோயாளிகளின் தேவையை நிறைவேற்றிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.