அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம்: டெண்டர் வெளியீடு
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் தொடங்குவதற்கான டெண்டரை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அம்மா உணவகம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து மாநகராட்சி தொடங்கியது.
அம்மா உணவகம் அமைக்க தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உணவகம் ரூ. 9.80 லட்சத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த டெண்டர் ஜூன் 7-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும். இதன் பின்னர் தகுந்த ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கும்.