தினமணி 9.11.2009
அரியலூர் நகராட்சியில் வெள்ள நிவாரணப் பணிகள்
அரியலூர், நவ. 8: அரியலூர் நகராட்சியில் மழைநீர் தேங்காத வகையில், வெள்ள நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக நகராட்சியின் நிர்வாக அதிகாரி த. சமயச்சந்திரன் தெரிவித்தார்.
அரியலூர் ஐயப்பன் ஏரிக்கரை, சித்தேரி வடிகால் ஓடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பார்வையிட்டு, பின்னர் அவர் கூறியது:
அரியலூர் நகராட்சியில் கடந்த ஆண்டு மழை பெய்தபோது, பெரியத் தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோ.சி. நகர், சடையப்பர் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதைக் கருத்தில் கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன்னரே, நகராட்சியின் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வடிகால் ஓடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், அரியலூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், செட்டி ஏரி, ஐயப்பன் ஏரி, சித்தேரி, அரசு நிலையுட்டான் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன.
மழையினால் சேதமடைந்த சாலைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதை உடனடியாகச் சீரமைக்கும் வகையில், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது.
அரியலூர் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் மாட்டு சாணங்களை சிலர் கொட்டி ஆக்கிரமித்துள்ளனர். அதை உடனடியாக அவர்களே அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவற்றை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சமயச்சந்திரன். அப்போது, மேற்பார்வையாளர் பாண்டு, சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.