தினமணி 27.11.2009
அரியலூர், பெரம்பலூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
அரியலூர், நவ. 26: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து ஆணையருமான எஸ். மச்சேந்திரநாதன் புதன், வியாழக் கிழமைகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் வட்டாட்சியர் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் தலைமை வகித்தார். கூட்டத்தில் முதன்மைச் செயலரும் போக்குவரத்து ஆணையருமான எஸ். மச்சேந்திரநாதன், அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச திட்டங்களின் நிலை குறித்தும், ஊரக வளர்ச்சி முகமை, குடிசை மாற்று வாரியம், பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகள் வாரியாகச் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட வேண்டுமென்று அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. பிச்சை, திட்ட அலுவலர் எஸ். வெங்கடாசலம், வேளாண் இணை இயக்குநர் கே. ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர் ஆர். பாரதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் எஸ். சடையப்ப விநாயகமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். நாகராஜன், முதன்மைக்கல்வி அலுவலர் நா. தேமொழி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எஸ். தமிழ்ச்செல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ். தமிழ்ச்செல்வன், கோட்டாட்சியர் ஆர். ஜீவரெத்தினம், வட்டாட்சியர் எம். எட்டியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூரில்…
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வில், விளாமுத்தூர் ஊராட்சியில் செம்மைநெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்த ஆணையர், செஞ்சேரி கிராமத்தில் ரூ. 81 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் விடுதியையும், அம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள பொது கணினிச் சேவை மையத்தையும் பார்வையிட்டு, அம்மையத்தில் வழங்கப்படும் சேவை குறித்து கேட்டறிந்தார். அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள உள் நோயாளிகள் அறை, அறுவைச் சிகிச்சை அரங்கம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, நோயாளிகளிடம் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டார். பின்னர், பாரத பிரதமர் சாலைத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 45 லட்சத்தில் செட்டிகுளம்–மாவிலங்கை–புதுஅம்மாபாளையம் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
முன்னதாக, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் எஸ். மச்சேந்திரநாதன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஒவ்வொரு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்து, வளர்ச்சி திட்டங்களை துரிதமாக செயல்படுத்த வேண்டுமென அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சு. பழனிசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ச. அமல்ராஜ், மகளிர் திட்ட அலுவலர் ச. தெய்வநாயகி, தேசிய தகவல் மைய அலுவலர் ரமேஷ், வட்டாட்சியர் ஜெயராமன், செய்தி–மக்கள் தொடர்பு அலுவலர் ம. ராஜேந்திரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.