தினமலர் 11.02.2010
ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை : அதிகாரிகள் முடிவு
உடுமலை: உடுமலை நகரில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரோட்டோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, மாற்று இடம் வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
உடுமலை நகரத்திலுள்ள முக்கிய ரோடுகள் அனைத்தும் குறுகலாக உள்ளதோடு, ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடுமலை பஸ் ஸ்டாண்ட், பொள்ளாச்சி ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, சத்திரம் வீதி உட்பட அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது.நகராட்சி அதிகாரிகளால், இரண்டு மாதத்திற்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம், அரசியல் தலையீடுகள் காரணமாக, மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது. ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது மேலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.ரோட்டோரங்களில் கடைகள் அமைத்திருந்தவர்களும், பல ஆண்டுகளாக இதனை நம்பியிருக்கும் தங்களுக்கு, வேறு வழியில்லை என தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கவும், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும் நகராட்சிகள் மண்டல அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில், நகராட்சி அதிகாரிகள் தற்போது ரோட்டோர கடைகள் குறித்தும், அதன் உரிமையாளர்கள் குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர். கடை உரிமையாளர்களிடம் படிவங்கள் கொடுத்து தகவல் சேகரித்து, போட்டோக்கள் பெற்றும் வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :ரோட்டோரங்களை நம்பி பிழைத்து வருபவர்களின் வாழ்வாதாரங்களை காக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு; பொது மக்கள் வந்து செல்லும் இடத்தை தேர்வு செய்து, மாற்று இடமாக வழங்கப்படும் என்றனர்.