தினமலர் 19.04.2010
ஆக்கிரிமிப்பாளர்களுக்கு ‘நோட்டீஸ்‘ : கலெக்டர் உத்தரவு
ராமநாதபுரம் : ‘மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இறுதியாக நோட்டீஸ் அனுப்புமாறும், பயனளிக்காமல் போனால் மேல்நடவடிக்கை எடுக்குமாறும், ‘ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் எல்லா பகுதிகளிலும் பரவலாக பரவியுள்ளது. குறிப்பாக பொதுப்பணித்துறை கண்மாய், அரசு புறம்போக்கு இடங்கள், ரோட்டோரங்களில் அதிகப்படியான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது குறித்து ஒவ்வொரு முறை எச்சரிக்கும் போது, அதை சம்மந்தப்பட்டவர்கள் பொருட்படுத்துவதில்லை. மாறாக, கூடுதல் ஆக்கிரமிப்பே செய்யப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தரும் எச்சரிக்கைகளையும் வீணாகிவருகிறது.ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பான மாதாந்திர கூட்டத்தில் கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது: 2006-07 பொதுப்பணித்துறை கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டத்தின் படி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள்,ரோட்டோரத்திலுள்ள ஆக்கிரமிப்புகள், வழிபாட்டு தலங்களை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லையெனில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ.,கள் இளங்கோ, ஞானகண்ணன், நிலஅளவை உதவிஇயக்குனர் சுந்தரபாண்டியன், தாசில்தார்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.