தினமணி 25.11.2009
ஆட்சியர் இல்ல குடிநீர் இணைப்பை துண்டிக்க உத்தரவு
திருநெல்வேலி, நவ. 24: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் மாநகராட்சி குடிநீர்க் குழாயில் இருந்து ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு (வீடு) செல்லும் குடிநீர்க் குழாய் இணைப்பை துண்டிக்க ஆட்சியரே உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு உத்தரவின்படி நோயாளிகள் நலச் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் முதல் கூட்டம் அதன் தலைவரான மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், சங்கத்தின் பரிந்துரையின்பேரில் இந்த நிதியாண்டில் செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில், மகளிர் நோய் பிரிவுக்குச் செல்லும் பாதையை கான்கிரீட் பாதையாக அமைத்தல், அங்கு ரூ.4.6 லட்சம் செலவில் கழிப்பிடம் கட்டுதல், ரத்த வங்கியில் உள்ள ஜெனரேட்டரைப் பழுதுநீக்குதல், கார் நிறுத்தும் இடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனையில் நீண்ட நாள்களாக நிலவி வரும் தண்ணீர் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் நிலையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததால் மருத்துவமனையில் சுத்தத்தைப் பாதுகாக்க முடியாத நிலை இருப்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அப்போது, மருத்துவமனைக்கு வரும் மாநகராட்சி குடிநீர் குழாயில் இருந்து மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், சி.எஸ்.ஐ. பேராயர் இல்லம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் இல்லம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வசிப்பிடங்களுக்கு இணைப்புகள் செல்வதாலும், ரயில் நகரில் அனுமதி இல்லாமல் சில வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாலும் மருத்துவமனைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைக் கேட்ட ஆட்சியர், தனது முகாம் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பால் மருத்துவமனைக்கு வரும் தண்ணீர் குறைவதாக இருந்தால் அந்த இணைப்பை உடனடியாக துண்டித்துவிட்டு மருத்துவமனைக்கு தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆட்சியர் உத்தரவிட்டு விட்டாலும், அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆட்சியர் இல்லம் மட்டுமன்றி, காவல்துறை கண்காணிப்பாளர், பேராயர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் இல்லங்களுக்கும் இணைப்புகள் உள்ளதால் அவற்றை எப்படி துண்டிப்பது என்பது குறித்தும் சிந்தித்து வருகின்றனர்.
இதனிடையே, அரசு மருத்துவனைக்குச் செல்லும் குடிநீர்க் குழாயில் இருந்து அப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கும், தனியார் மருத்துவமனை ஒன்றுக்கும் முறையான அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவ
னங்கள் அதிகமான தண்ணீரை உறிஞ்சுவதால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் தண்ணீர் பெருமளவு குறைந்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே, ஆட்சியர் இல்லத்திற்கான இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதையே முன்னுதாரணமாகக் கொண்டு இதர இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்து மருத்துவமனைக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வார்கள் என நம்புவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்தில், மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் வைரமுத்துராஜ், மகளிர் நோய் பிரிவு பேராசிரியர் ரமோலா, குழந்தைகள் நோய் பிரிவு பேராசிரியர் கதிர் சுப்பிரமணியன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மருத்துவமனை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.