ஆத்தூர் நகராட்சியில் உப்பு நீர் சுத்திகரித்து வழங்கும் திட்டம்
ஆத்தூர்: தமிழகத்தில் முதன் முறையாக, ஆத்தூர் நகராட்சியில், பொதுமக்களுக்கு, உப்பு நீரை சுத்திகரித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களில், கூட்டுக் குடிநீர் திட்டம், திறந்த வெளி கிணறு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அவ்வாறு சப்ளை செய்யும் பெரும்பாலான திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறுகளில், உப்பு நீர் அதிகம் கிடைப்பதால், அந்த நீரை பருகும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. அதனால், உப்பு தண்ணீர் உள்ள பகுதிகளுக்கு, சுத்திகரிப்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, வார்டுகளில், பெரும்பாலும் உப்பு நீர் மட்டுமே வருகிறது. இந்த உப்பு நீரை, குடிநீரை சுத்திகரிக்கும், “ஆர்.ஓ.,’ இயந்திரம் பொருத்தப்பட்டு, சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு, கள்ளக்குறிச்சி எம்.பி., ஆதிசங்கரிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், தமிழகத்தில் முதன்முøறாக, ஆத்தூர் நகராட்சி, 9வது வார்டில் உள்ள மினி குடிநீர் தொட்டி அருகில், உப்பு நீரை சுத்திகரித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும், “ஆர்.ஓ.,’ இயந்திரம் பொருத்துவதற்கு, எம்.பி., ஆதிசங்கர், நான்கு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு செய்யும் இயந்திரத்தை, 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஸ்டாலின், தி.மு.க., குழுத் தலைவர் காசியம்மாள் மற்றும் வார்டு மக்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.