தினமலர் 12.05.2010
ஆழ்குழாய் கிணறு அமைக்க தடை
பெ.நா.பாளையம் : கூடலூர் பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. கூடலூர் பேரூராட்சியில், 41 ஆழ்குழாய் கிணறு இருக்கிறது. 19 கைபம்புகள் பொதுமக்களின் பயன் பாட்டில் உள்ளது. இரண்டு திறந்தவெளிக் கிணறுகளிலிருந்தும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. இவை அனைத்தும் பொதுமக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை. இதனால் கடந்த ஆண்டு பராமரிப்பு இல்லாமல் இருந்த கிணறுகளை பேரூராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தி, தூர்வாரும் பணியில் ஈடுபட்டது.இதில், இரண்டு திறந்தவெளிக் கிணறுகளில் இருந்து தண்ணீர் கிடைத்தது. தற்போது, கோடை வெயில் கொளுத்துவதால் நிலத்தடி ர்மட்டம் குறைந்து விட்டது. கூடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாணசுந்திரம், தலைவர் ரங்கசாமி, ஆகியோர் கூறுகையில், ‘பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு ஏதும் அமைக்கக் கூடாது. ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டால், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 1920ன் படி நடவடிக்கை தொடரப்பட்டு, காவல்துறை நடவடிக்கையும் எடுக்கப்படும்‘ என்றனர்.