இணைய வழியில் நில ஆவணங்கள்:ஆட்சியர் வேண்டுகோள்
இணைய வழியில் நில ஆவணங்களை பராமரிப்பதற்குரிய மென்பொருளை முன்னோடித் திட்டமாக செயல்படுத்திட கமுதி வட்டம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இணைய வழியில் நில ஆவணங்களை பராமரிப்பதற்குரிய மென்பொருளை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கமுதி வட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே கமுதி வட்டத்தை சேர்ந்த நில உடமைதாரர்கள் தமது நில ஆவணங்களில் மாற்றம் செய்யவோ அல்லது பிழைகளை நீக்கம் செய்யவோ விரும்பினால் தமது விண்ணப்பங்களை நில உரிமைப் பத்திரங்களின் நகல்களுடன் வரும் 10.5.2013 அல்லது அதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் வட்டாட்சியர் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.