தினமலர் 25.02.2010
இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் மாநகராட்சி கட்டுமானப் பணிகள்: மேயர் தகவல்
சென்னை: “”மாநகராட்சி கட்டடங்கள், இயற்கைச் சீற்றங் களை எதிர்கொள்ளும் வகையில் கட்டப்படுகின்றன,” என, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் பேசினார். அண்ணா பல்கலையின் இயற்கை பேரிடர் துயர் துடைப்பு மையம் சார்பில், சென்னை மாநகராட்சி பொறியாளர்களுக்கு, சென்னை மாநகர கட்டடங்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து காப்பது குறித்த பயிரலங்கம் நேற்று நடந்தது.
பயிலரங்கில் மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: ஆசியாவில் தற்போது ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆறு உள்ளன. அவற்றின் வரிசையில் சென்னை நகரும் விரைவில் சேர உள்ளது. பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங் களிலிருந்து மக்களை பாதுகாப்பதில், சென்னை நகரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களின் ஸ்திரத்தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட மருத்துவமனைகள், உடற்பயிற்சி மற்றும் சத்துணவு கூடங்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இயற்கைச் சீற்றங் களை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் உருவாகும் அரசு மற்றும் தனியார் கட்டடங்களும் இயற்கைச் சீற்றங்களை எதிர் கொள்ளும் வகையில் கட்டப்படுவது உறுதி செய்யப்படும். இவ்வாறு சுப்ரமணியன் பேசினார்.
அண்ணா பல்கலையின், “சிவில் இன்ஜினியரிங்‘ துறை முன்னாள், “டீன்‘ சாந்தகுமார் பேசும் போது, “சென்னையில் சமீபகாலமாக லேசான நிலநடுக்கம் அவ்வப்போது உணரப்படுகிறது. இது மிகப்பெரிய அசம்பாவிதத்திற்கு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். பூகம்பத்தை எதிர் கொள்ளும் வகையில், சென்னை மாநகரின் பழைய கட்டடங்களின் ஸ்திரத்தன்மையை மேம் படுத்துவது குறித்த தொழில்நுட்ப பயிற்சியை மாநகராட்சி பொறியாளர்கள் பெறுவதும் அவசியம்‘ என்றார்.
பயிலரங்க துவக்க நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர், இயற்கை பேரிடர் துயர்துடைப்பு மைய இயக்குனர் ராஜரத்தினம், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, தலைமைப் பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, சென்னை மாவட்ட அளவில் 2008-09ம் நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட, சைதாப்பேட்டை மண்டலத்தை சேர்ந்த யமுனை, சிந்து பாரதி மற்றும் கீழ்ப்பாக்கம் மண்டலத்தைச் சேர்ந்த சரோஜினி ஆகிய மகளிர் உதவிக் குழுக்களுக்கு, மணிமேகலை விருதையும், தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் மேயர் வழங்கினார்.